மத்திய பிரதேசத்தில் டீக்கடைகாரர் ஒருவர் தனது 5 வயது மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக ஆன்ராய்டு செல்போன் வாங்கியுள்ளார். இதனால் அவர் மேளதாளம் மற்றும் இசை கச்சேரியுடன் ஊர்வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் வியக்க வைத்தது.
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முராரி குஷ்வாஹா. இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அவரின் ஆன்லைன் வகுப்பிற்காக நீண்டநாட்களாக செல்போன் வாங்க வேண்டும் ஆசை இருந்துள்ளது. முராரியின் குடும்பத்தில் இதுவரை செல்போல் வாங்கியதில்லை எனவும் கூறப்படுகிறது.
மது குடிக்கும் பழக்கத்தில் இருந்த முராரி சில மாதங்களுக்கு முன் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதுவும் தனது மகளின் கோரிக்கைப்படியே. அதுமட்டுமில்லாமல் மதுகுடிக்க செலவு செய்யும் பணத்தை சேமித்து வைத்து மொபைல் வாங்கி தருமாறு அந்த 5 வயது சிறுமி கேட்டுள்ளார். மகளின் விருப்பப்படியே ரூ. 12, 500 க்கு ஆண்ட்ராய்டு மொபைல் போனையும் வாங்கியுள்ளார். முராரி குஷ்வாஹாவிடம் நிதி பற்றாக்குறை இருந்ததால் அவர் செல்போனை ஃபினான்ஸில் வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்துதான் அவர் மேளதாளம் மற்றும் இசை கச்சேரியுடன் ஊர்வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் நண்பர்களுக்கு விருந்தும் அளித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமியும் அவளது உடன்பிறப்புகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. ஒலிபெருக்கியில் பாடல் இசைக்க, மக்கள் ஊர்வலத்தில் நடமாடுகின்றனர்.
இதுகுறித்து முராரி குஷ்வாஹா கூறுகையில், “மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டு பணத்தை சேமித்து வைக்குமாறு எனது 5 வயது மகள் என்னிடம் கோரிக்கை விடுத்தார். அந்த பணத்தில் அவளுக்கு ஒரு செல்போன் வாங்கி தருமாறு நீண்டநாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். நானும் எனது மகளுக்கு ஒரு தனித்துவமான பாணியில் மொபைல் போனை வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தேன். அதன்படி இப்போது செல்போன் வாங்கியுள்ளேன். எனது மகளின் சந்தோஷத்திற்காகவே இவை அனைத்தையும் செய்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்