கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் அங்குள்ள கோயிலுக்கும் முன்பு இஸ்லாமியர்கள் கடைகள் வைத்திருக்கக் கூடாது என்று, ஸ்ரீ ராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பழக்கடைகளை உடைத்து சேதப்படுத்திய வீடியோ பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் வலதுசாரி இந்து அமைப்பான ஸ்ரீ ராம் சேனாவைச் சேர்ந்த சிலர் சனிக்கிழமையன்று கர்நாடகாவில் உள்ள தார்வாட்டின் நுக்கிகேரி கிராமத்தில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு அருகில் இஸ்லாமியர்கள் வைத்திருந்த பழக்கடைகளை சேதப்படுத்தினர்.


இளைஞர்கள் பக்வா ஆரஞ்சு நிற துணியை அணிந்து கொண்டு, தர்பூசணி விற்பனையாளரின் வண்டியை சாலை முழுவதும் வீசும் சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.






ஏற்கனவே, இந்த கோயிலுக்கு முன்பு முஸ்லிம்கள் தங்கள் கடைகள் மற்றும் வண்டிகளை அமைக்க வேண்டாம் என்று எச்சரித்ததாகவும், கோவிலுக்கு அருகில் எந்த வியாபாரமும் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும்  அந்த அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும், தர்பூசணி விற்பனையாளரான நபிசாப் ஒருவர், அத்தகைய எச்சரிக்கை எதுவும் தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்.


இந்த சம்பவம் குறித்து, அங்குள்ள பழக்கடைக்காரர் நபிசாப் கூறுகையில், ”திடீரென்று வந்து என்னை அறைந்தார்கள். இங்கே கடை வைக்கக் கூடாது என்று தெரியாதா என்று கேட்டார்கள். அது எனக்குத் தெரியாது என்றேன். ஆனால், என்  தர்பூசணிகளை மூட்டை கட்டுவதற்குக் கூட நேரம் கொடுக்காமல், எல்லா தர்பூசணிகளையும் எடுத்து கீழே வீசினார்கள்.  இதனால், எனக்கு 8,000 ரூபாய்க்கு மேல் நஷ்டம். நான் இங்கு 15 வருடங்களாக வியாபாரம் செய்து வருகிறேன், யாரும் அதை எதிர்க்கவில்லை. இப்போது முஸ்லிம்களிடம் எதையும் வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கத்துகிறார்கள்." என்று நபிசாப் கூறியுள்ளதாக ஒரு செய்தி நிறுவனம் கூறுகிறது.


இந்தச் சம்பவம் குறித்து எந்தக் கண்டனமும் தெரிவிக்காமல், கோயில் அர்ச்சகர் நரசிம்மராவ் தேசாய், “கோயில் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.”என்றார்.


"இன்று சனிக்கிழமை என்பதால், அதிக கூட்டம் இருந்ததால் வெளியில் கவனம் செலுத்த முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்துக்கள் அல்லாதவர்கள் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டாம் என்று அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.. எனக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாது. ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட கோவில் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்வோம்" என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வன்முறை சம்பவம் நடந்த போது, போலீசார் அங்கு இருந்த போதிலும், குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண