விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்து காட்டினார் கல்பனா சாவ்லா. கல்பனாவுக்கு சிறுவயதிலேயே பைலட்டாக ஆசை. ஆனால், அதைச் சொன்னபோது அவரின் பெற்றோரே அதற்கு சம்மதிக்கவில்லை. டாக்டர், இன்ஜினீயர் அல்லது ஐ.ஏ.எஸ்... இந்த மூன்றும்தான் கல்பனாவுக்கு பெற்றோர் கொடுத்த சாய்ஸ். அதில் ஒன்றைத் தேர்வுசெய்திருந்தால் இன்று நம் யாருக்குமே தெரியாமலே போயிருக்கலாம். ஆனால், விடாமல் தன் கனவுகளைத் துரத்தினார்; ஒருநாள் அவற்றை சாத்தியமாக்கினார்.


1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) இல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.



1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார். அப்போது அவர் அந்த பயணத்தில் இருந்தபோது, இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஐகே குஜ்ராலுடன் காணொளி காட்சியில் பேசினார். அப்போது அவரிடம் குஜ்ரால் ஒரு கேள்வி கேட்டார், "நட்சத்திரங்களுக்கு அப்பால் வேறு பல உலகங்கள் இருக்கும் அல்லவா?" என்றார். அதற்கு கல்பனா சாவ்லா, "ஆமாம், இருண்ட ஆகாயங்களின் உலகம்தான் இது… எங்கெங்கும் நட்சத்திரங்கள்… ஆங்காங்கே இடி மின்னல் சிறிதாய் தெரியும்… மேகங்களுக்கு இடையே நகரத்தின் விளக்குகள் போன்ற அற்புதமான காட்சியுடன் எப்போதும் மின்னிக்கொண்டிருக்கும். இது குழந்தைகளுடய கதை புத்தகம் போன்றதுதான்!" என்று கூறியிருந்தார்.






முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002 -ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது.


இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.


நேற்று கல்பனா சாவ்லாவின் நினைவு தினம்..