சிம்கார்டு, சிப், ஜியோனி,மிஸ்டு கால், ஹைகோர்ட்... இதெல்லாம் ஆட்களின் பெயர் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தான் இந்த விநோதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன.


தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் தோ கிலோமீட்டர் ஹை என்று சொல்லியே ஒரு பெரியவர் கார்த்தியை அழைத்துச் செல்வாரே, அப்படியொரு கிராமம் தான் பண்டி மாவட்டத்தில் உள்ள ராம் நகர்.


இங்கு வெறும் 500 குடும்பங்கள் தான் இருக்கின்றன. கல்வியறிவு இப்போதுதான் லேசாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ள கிராமம். அந்தக் காலத்தில் கல்வியறிவு இல்லாததாலும் விவசாயம் வேறு தொழில் இல்லாததாலும் இந்த ஊரைச் சேர்ந்த காஞ்சார் இன மக்கள் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நாடு 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ள வேளையிலும் கூட இவர்கள் மீது எந்த அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையும் கூட படவில்லை போலும். அதனால் தான் வேறு வழியின்றி இன்னமும் திருட்டு, வழிப்பறி என்றே வாழ்க்கையை ஓட்டுகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்கே என்ன திருட்டுச் சம்பவம் என்றாலும் இந்த ஊருக்குப் போலீஸ் வந்து யாரையாவது கூட்டிச் சென்றுவிடும்.


அப்படி ஒருவர் சிறைசென்றுவிட அவருக்கு ராஜஸ்தான் ஹைகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. உடனே அந்த நபர் தன் மகனுக்கு ஹைகோர்ட்டு எனப் பெயர் வைத்துவிட்டார். இப்படி இந்த ஊரார் இன்னும் நிறைய விநோதப் பெயர்களை வைத்துள்ளனர். சிம்கார்டு, சிப், ஜியோனி,மிஸ்டு கால், ஹைகோர்ட், செல்போன், சாம்சங், என பல பொருட்களின் பிராண்ட் பெயர்கள் இங்கே உள்ள குழந்தைகளின் பெயராக உள்ளது. இதுமட்டுமல்ல கலெக்டர், எஸ்பி, வக்கீல், என அரசுப் பதவிகளின் பெயர்களையும் வைத்துள்ளனர். கலெக்டர் சிறை செல்வார், எஸ்பி திருடுவார்.. அட இந்த ஊர்க்காரர்களின் பெயர் அப்படிங்க.


இந்த கிராமத்துக்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் திடீரென வருகை தந்து, அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். கலெக்டரின் மிடுக்கான தோற்றத்திலும் தோரணையிலும் மிரண்டுபோன ஒரு பெண் தனது பேரனுக்கு ‘கலெக்டர்’ என பெயர் வைத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்ட இந்த கிராமத்தினர், தங்களின் பிள்ளைகளுக்கு இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என பெயர்களை வைத்து அழைக்கிறார்கள். அப்படியாவது நாலு மனுஷங்க பெயரை இந்த கிராம மக்கள் வைத்தனரே என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். ஆனால் இவர்களின் முன்னோர் இப்படியல்ல. அவர்கள் சமூகம் சார்ந்த பெயர்களையே வைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தான் இந்த ஊர் மக்கள் இப்படி விநோதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். 


ராம்நகர் கிராமத்தின் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “ராம் நகர் கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கொள்ளை, வழிப்பறி, திருட்டு என குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் கைது, சிறை, வழக்கு என்பதே இவர்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. கைது தொடங்கி நீதிமன்றம் வரை இவர்கள் பார்க்கும் அதிகாரிகளின் பதவி பெயர்களையே பிள்ளைகளுக்கு வைத்துவிடுகின்றனர் என்றார்.


இப்போது பெயரளவில் கலெக்டர், எஸ்பி, வக்கீலாக இருக்கும் சிறுவர், சிறுமியாவது கல்வியறிவு பெற்று எதிர்காலத்தில் அந்தப் பதவிகளில் அலங்கரித்தால் இந்தச் சமூகத்தின் மீதான கறை நீங்கும்.