மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மாடு ஒன்று இருப்பது போன்ற வீடியோ வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
மருத்துவமனையில் பாதுகாப்பு பிரச்சனைகள்
மருத்துவமனைகள் குறித்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அடிக்கடி கேள்விக்குள்ளாகி வருகின்றன. மருத்துவமனையில் மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் இந்திய அரசு மருத்துவமனைகள் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அதே போல பாதுகாப்பு விதிகளும் சரியாக கடைப்பிடிக்கப் படுவதில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மருத்துவமனை ஐசியு வார்டுக்குள் மாடு உள்ளே வரும் வரை கவனிக்காமல் இருந்தது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
வைரல் விடியோ
வைரலாக பரவிய இந்த வீடியோவில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் இருந்து மருத்துவ கழிவுகளை சாப்பிடும் மாடு ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிவதைக் காணமுடிகிறது. அந்த மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்களும் அந்த வீடியோவில் காணப்படுகின்றனர். பணியாளர்கள் இருக்கும்போதே மாடு எவ்வாறு உள்ளே வந்தது என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மருத்துவர் பேட்டி
இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ராஜேந்திர கட்டாரியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “நான் நிலைமையை கவனித்து வார்டு பாய் மற்றும் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த சம்பவம் எங்களின் பழைய கோவிட் ஐ.சி.யூ. வார்டில் இருந்து வந்தது." என்று குறிப்பிட்டார்.
ஊழியர்கள் மீது நடவடிக்கை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு காவலாளி மற்றும் இரண்டு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி, இதுபோன்ற சம்பவம் எதுவும் தனக்குத் தெரியாது என்று கூறினார்.
இதேபோல கடந்த ஆண்டு, மருத்துவமனை படுக்கையில் நாய் அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் வார்டுக்குள், காவலர் முன்னிலையில் நாய் ஒன்று அவருக்கு தெரியாமல் உள்ளே நுழைந்தது. ஆனால் இங்கு இவ்வளவு பெரிய உருவமான மாடு உள்ளே நுழைவதை கவனிக்காமல் இருந்ததாக காவலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.