கடந்த 1998ம் ஆண்டு முதல் பா.ஜ.க.வின் ஆட்சியே தொடர்ந்து நடைபெற்று வரும் குஜராத்தில், இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். அதைதொடர்ந்து, டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மோடி சோம்நாத் கோயிலில் வழிபாடு:
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பாஜகவின் முக்கிய தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும், பரப்புரையில் ஈடுபடுவதற்காக இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்குள்ள, சோம்நாத் கோயிலுக்கு சென்று அவர், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தினார்.
பிரதமர் மோடி சூறாவளி பரப்புரை:
அதைதொடர்ந்து, வேரவல் மற்றும் தோராஜி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து, வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அதைதொடர்ந்து, அம்ரேலி மற்றும் பொடாட் ஆகிய பகுதிளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதேபோன்று, நாளையும் சுரேந்திராநகர், ஜபுசார் மற்றும் நவ்சாரி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மோடி பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
குஜராத்தில் மாநிலத்தின் முதலமைச்சராக 4 முறை பதவி வகித்த நரேந்திர மோடி மற்றும் அவரது ஆட்சிமுறையை முன்னிலைப்படுத்தியே, 2014ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை கைப்பறியது. இதன் காரணமாகவே குஜராத் சட்டமன்ற தேர்தல், பாஜகவிற்கு தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே, காங்கிரசுடன், ஆம் ஆத்மி கட்சியும் அங்கு களமிறங்கியுள்ளதால், குஜராத் சட்டமன்ற தேர்தலில் தற்போது மும்முனை போட்டி நிலவி வருகிறது.