மும்பையில் கருப்பு கோகெயின் என்ற போதை பொருளை நாட்டிற்குள் கொண்டுவர சில சமூக விரோதிகள் முயற்சி செய்துள்ளனர். அதை, போதைப்பொருள் தடுப்பு முகமை தடுத்து நிறுத்தியுள்ளது. போதைப்பொருள் தடுப்பு முகமையின் மும்பை பிரிவு, கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி விமான நிலையத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த நபரிடமிருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளைக் கைப்பற்றியது.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கருப்பு கோகெயின் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், மோப்ப நாய்களாலும் அதை கண்டறிய முடியவில்லை.
இதுகுறித்து விவரித்த போதைப்பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் அமித் கவாட், "நாட்டில் முதன்முறையாக இந்த வகை கொக்கைன் பிடிபட்டுள்ளது. கடத்தல்காரர்கள் மோப்ப நாய்களிடமிருந்து தப்பிக்க அதன் நிறத்தையும் வாசனையையும் மாற்ற வழக்கமான கோகோயினை ரசாயனம் ஒன்றுடன் கலந்துள்ளனர்.
இந்த வழக்கில் மும்பை விமான நிலையத்தில் ஒரு பெண் மற்றும் கோவாவில் ஒரு ஆண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிவிய நாட்டை சேர்ந்த பெண், கோவாவில் நைஜீரிய பிரஜை ஒருவருடன், கடத்தல் பொருட்களைப் பெறுவதற்காக காத்திருந்தார். அவர்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரது பெட்டியில் தேடியதில் கறுப்பு நிறப் பொருளின் இறுக்கமான பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன" என்றார்.
சமீபத்தில், மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தின் நலசோபராவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு ஆலையில் மும்பை போலீசார் நடத்திய சோதனையில் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிலோகிராம் மெபெட்ரான் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கரிம வேதியியல் முதுகலை பட்டதாரி உட்பட 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். நலசோபராவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு ஆலையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அந்த அலுவலர், "குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதை தடுப்பு பிரிவு குழு அந்த வளாகத்தில் சோதனை நடத்தியது. அப்போது, தடைசெய்யப்பட்ட மருந்தான மெபெட்ரோன் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் நலசோபராவில் கைது செய்யப்பட்டார். நலசோபராவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கரிம வேதியியல் முதுகலைப் பட்டதாரி ஆவார், போதைப்பொருள் தயாரிப்பதில் தனது திறமையைப் பயன்படுத்தியுள்ளார். சமீப காலமாக மாநகர காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மிக பெரிய போதைப்பொருள் கடத்தலில் இதுவும் ஒன்று" என்றார்.