இமாச்சலப் பிரதேசம் முழுவதும் இன்று மழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குலு மாவட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். மற்ற இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பாவில் உள்ள பார்மூரில், மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணிமகேஷில் ஆன்மீக யாத்திரை நிறுத்தப்பட்டது.
இதன் வீடியோக்கள் வைரலாகின. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து குலுவில் உள்ள சாவேலு தேவி (55) மற்றும் கிருத்திகா (17) ஆகியோரின் வீடு காலை 9 மணியளவில் இடிபாடுகளில் சிக்கியதில் அவர்கள் இறந்தனர் என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுதேஷ் மோக்தா தெரிவித்துள்ளார்.
அதே பகுதியில் உள்ள டெயூதி கிராமத்தில் இன்று காலை 7.30 மணியளவில் மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 10 கடைகள் மற்றும் 3 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பழைய பேருந்து நிலையம் மற்றும் ஊராட்சி கட்டிடம் ஆகியவையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அபாயம் உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் மோக்தா கூறியுள்ளார்.
பாண்டோ அருகே நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மண்டியில் இருந்து குலுவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் முடக்கப்பட்டது. கட்டவுலா வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
சம்பாவில் பார்மூரில் ஏற்பட்ட மேக வெடிப்பில், கனரக இயந்திரங்கள் மற்றும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் கடை அடித்துச் செல்லப்பட்டது. இந்த மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.
மாநில தலைநகர் சிம்லா அருகே, சோபால் அருகே பெய்த கனமழையால், மூன்று கார்கள் மற்றும் ஒரு வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. குலுவில் இருந்து லாஹவுல்-ஸ்பிடியில் வரையிலான பகுதியில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்