கர்நாடகா மாநிலம் மைசூருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழைக்கு மத்தியில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் பேசியது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஆரவாரத்தை தூண்டியுள்ளது.


 






இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மழையோ? வெப்பமோ? எதனாலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம், தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. அப்போது, இடைவிடாத மழைக்கு மத்தியில் தனது உரையைத் தொடர்ந்தபோது, ​​​​கூட்டத்தினர் அவருக்கு ஆரவாரம் செய்து அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். பேரணியில் தன்னுடன் நடந்ததற்கும், பலத்த மழை பெய்தாலும் தம்முடைய பேச்சைக் கேட்டு ஆதரவளித்ததற்கும் ராகுல் காந்தி தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


இந்திய ஒற்றுமை நடைபயணம், அண்ணல் காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம் என்றும் ராகுல் காந்தி நேற்று கூறினார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள படனாவலுவில் உள்ள காதி கிராமோத்யோக் மையத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்று பேசிய ராகுல், "கடந்த 8 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில் நாட்டு மக்களின் சுதந்திரம் பறிபோய்விட்டது.


அண்ணல் காந்தி, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடியது போல், காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் போராடுகிறோம். இந்த சித்தாந்தம் கடந்த எட்டு ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை மற்றும் நாம் கடினமாக வென்ற சுதந்திரத்தின் அரித்து வருகிறது" என்றார்.


 






இதேபோன்று, கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கனமழைக்கு மத்தியிலும் மக்கள் முன்பு உரை நிகழ்த்தினார்.


இதை நினைவுப்படுத்தி பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் க்ளைட் க்ராஸ்டோ, "காலம் நிரூபித்தது. காலம் நிரூபிக்கும்.  வருண பகவான் உங்களை ஆசீர்வதிக்க முடிவு செய்தால், எதிர்க்கட்சி முகாமில் விரைவில் புயல் வீசும்" என ட்விட்டரில் ராகுல் காந்தி வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.


அக்டோபர், 2019இல் மக்களவை இடைத்தேர்தலின் போது சதாராவில் மழைக்கு மத்தியில் பேசிய சரத் பவாரின் புகைப்படமும் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பேசிய புகைப்படமும் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.