மொத்தமாக, ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 6ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
பீகாரில் இரண்டு தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பீகாரில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் அடம்பூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானாவில் முனுகோட் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஒடிசாவில் கோலா கோக்ரநாத் மற்றும் தாம்நகர் (தனி) ஆகிய இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 14 கடைசி நாளாகும். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை அக்டோபர் 17 அல்லது அதற்கு முன்பு திரும்பப் பெற்று கொள்ளலாம். இடைத்தேர்தலை நவம்பர் 7ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
பீகாரில், வழக்கில் ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், மொகாமா தொகுதியின் அப்போதைய எம்எல்ஏவான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அனந்த் குமார் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இடைத்தேர்தல் நடத்துவது அவசியமாகியுள்ளது.
கோபால்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சிங், ஆகஸ்ட் மாதம் காலமானதை அடுத்து அத்தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் மற்றும் ஒடிசாவின் தாம்நகர் தொகுதிகளும் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்டன.
ஹரியானாவில் குல்தீப் பிஷ்னோய் மற்றும் தெலங்கானாவில் கே. ராஜகோபால் ரெட்டி ராஜினாமா செய்ததால், அடம்பூர் மற்றும் முனுகோட் தொகுதிகள் காலியாகின.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை, சிவசேனை கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து முதல் முறையாக மக்கள் மன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை எதிர்கொள்கிறது. முன்னதாக, கட்சியின் பெரும்பாலான எம்எம்ஏக்களின் உதவியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.
இச்சூழலில், நவம்பர் 3ஆம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இவர் இருமுறை வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டு வரும் நிலையில், இடைத்தேர்தல் இரு பிரிவின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.