பழங்காலத்தில் கடிதங்கள், மணி ஆர்டர்கள் மற்றும் தந்திகளை எடுத்துச் செல்ல தபால்காரர்கள் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதித்துச் செல்ல வேண்டும். அதனால் அது பெண்களுக்கு ஏற்ற வேலையாகக் கருதப்படவில்லை. ஆனால், 1950களின் பிற்பகுதியில், அப்போது 20 வயதுடைய கே.ஆர்.ஆனந்தவல்லி, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் தபால்காரர் வேலைக்கு விண்ணப்பித்தார்.


அவரது தொடக்க நாட்களில் சில மனச்சோர்வு இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து பணிபுரிந்தார், முஹம்மா பகுதியில் இருந்த அலுவலகத்தில் 1991ல் தான் ஓய்வு பெறும் கடைசி காலம் வரை பணியாற்றினார். அஞ்சல்துறையில் பல பதவிகளையும் வகித்தார். இவர் அக்டோபர் முதல் நாள் தனது 89வது வயதில் இறந்தார். தான் வாழ்ந்த மூன்று தசாப்தங்களில் அவர் தகவல்தொடர்புத்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


“நாங்கள் குழந்தையாக இருந்தபோது கேரளாவின் முதல் போஸ்ட் வுமன் அவர் என்பதை மாத்ருபூமியில் எழுதிய ஒரு கட்டுரையில் அறிந்தோம். ஆனால் ஒரு புகைப்படக் கலைஞராக நான் செய்தித்தாள்களில் எனது புகைப்படங்களை வெளியிடத் தொடர்புகொள்ளத் தொடங்கியபோதுதான் பெண் தபால்காரர் என்கிற அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். மெயில் டெலிவரி செய்ய அவர் சவாரி செய்த பழைய ராலே சைக்கிளில் நான் அவரைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்,” என்கிறார் ஆனந்தவல்லியின் மகன் தனராஜ்.





அவரது சைக்கிள் சவாரிக்கு பயன்படுத்தப்படாவிட்டாலும், இன்னும் குடும்பத்தால் பராமரிக்கப்படுகிறது. "என் தந்தை அதை சவாரி செய்தார், பின்னர் நான் அதை சவாரி செய்தேன். ஆனால், இப்போது அது பயன்படுத்தப்படவில்லை,'' என்கிறார் அவர்.


தான் தபால்காரராக இருந்த நாட்கள் குறித்து ஆனந்தவல்லி தனது பிள்ளைகளிடம் நிறைய பகிர்ந்துகொண்டதாக தனராஜ் கூறுகிறார். “அம்மாவுக்கு கேரளாவின் முக்கிய நபர்களூடன் நல்ல பரிச்சயம் இருந்தது. அந்த நாட்களில் முஹம்மா தபால்நிலையத்தில் தந்தி வ்சதிகள் இல்லை. முஹம்மாதான் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலனுடைய மனைவி சுசீலா கோபாலனின் ஊர்.அவர்தான் அங்கே முதன்முதலில் தந்தியை அறிமுகப்படுத்தினார். ஏ.கே.ஜி.யின் அறிவுரைகள் வந்ததும், என் அம்மாதான் அதை எடுத்துவிடுவார். அப்போது அவர் எவ்வளவு பதற்றமாக இருந்தார் என்பதை அவர் எங்களிடம் கூறுவார்,” என்கிறார் தனராஜ்.


உள்ளுர் தொலைக்காட்சியின் மற்றொரு செய்தி, ஆனந்தவல்லி தபால் சேவையில் சேர்ந்ததற்கு முன்னான சூழல் குறித்துப் பகிர்ந்திருந்தது. சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர் வேலையில் சேர விடாமல் தடுத்ததை அடுத்து ஆனந்தவல்லி வேலை கிடைத்த முதல் நாளே ராஜினாமா கடிதத்துடன் அலுவலகம் சென்றார். அந்தக் கடிதத்தைப் பார்த்த அலுவலக ஸ்டெனோகிராஃபர், அதைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டார். அப்படிக் கிழித்துப் போட்ட கடிதம்தான் கேரளாவுக்கான முதல் பெண் தபால்காரரைப் பெற்றுத்தந்தது என்கிறார்.


ஆனால் ஆனந்தவல்லிக்கு ஆயுர்வேத மருத்துவரான அவரது தந்தை கே.ஆர்.ராகவனின் ஆதரவு இருந்தது. வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த பிறகுதான், தபால் வேலையை எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றி சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். அவர் ஓட்டத் தொடங்கிய ராலே சைக்கிள் அவருடைய தந்தையின் பரிசு.


தபால்காரராக ஆனந்தவல்லியின் முதல் சம்பளம் ரூ.97.50. அவர் சமஸ்கிருத ஆசிரியரான வி.கே.ராஜன் என்பவரை மணந்தார். அவர்களுக்கு தன்ராஜ் மற்றும் உஷாகுமாரி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.