EID Celebration: பக்ரீத் பண்டிகையை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


பக்ரீத் பண்டிகை:


பக்ரீத் என்பது இஸ்லாமிய சமயத்தில் கொண்டாடப்படும் இரண்டாவது பெரிய பண்டிகையாகும். இது புனிதமான ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. மேலும் இது இப்ராஹிம் நபியின் அல்லாஹ்வுக்கான முழுமையான அர்ப்பணிப்பின் நினைவாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹிஜ்ஜா / ஜுல் ஹிஜ்ஜா / து அல்-ஹிஜ்ஜா மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.


பக்ரீத்தின் முக்கியத்துவம்:


தியாகத்தின் செயல் என்பத விட, பக்ரீத் என்பது அன்பின் கொண்டாட்டமாகும். இன்றைய நாளில் தயாரிக்கப்பட்ட உணவு மூன்று சம பாகங்களாக விநியோகிக்கப்பட வேண்டும். ஒரு பகுதி குடும்பத்தினருக்கும், இரண்டாவது பகுதி உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதி ஏழை மற்றும் எளியோருக்கும் வழங்க வேண்டும். பலியிடுதலின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வை அடையவில்லை என்றாலும், அவருடைய மக்களின் பக்தி அவரை சென்றடைகிறது என்று நம்பப்படுகிறது.


இஸ்லாமியர்கள் உற்சாகம்:


அதன்படி, உலகம் முழுவதும் உள்ள இஸ்லமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் பக்ரீத் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. காலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்தி பள்ளி வாசல்களில் குவிந்து வருகின்றனர். அங்கு சிறப்பு தொழுகைகளும் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.






பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை:


டெல்லியில் உள்ள பிரபலமான ஜாமா மசூதியில், சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்பு ஒருவரை ஒருவர் அனைத்து வாழ்த்துகளை கூறினார்.






இதேபோன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மஹிமின் மக்தூம் அலி மஹிமி மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் திரண்டு  தொழுகை நடத்தினார்கள்.






ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில்,  சோன்வார் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இஸ்லாமியர்கள் குவிந்து நமாஸ் செய்தனர். டெல்லியின் தர்கா பஞ்சா ஷெரீப்பில் பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தொழுகை நடத்தினார்.