Kanchanjunga Train Accident: மேற்கு வங்கத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளனது. டார்ஜலிங் மாவட்டம், பனிஷ்மாவா என்ற இடத்தில் சியால்டா செல்லும் கஞ்சன் ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. 


 






மீட்பு பணி தீவிரம்:


தகவல் அறிந்த பேரிடர் மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரயில் பெட்டிகள் மற்றும் சரக்கு பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று கவிழ்ந்துள்ளதால் மீட்பு பணி சிரமமாக உள்ளது. தற்போதைய தகவல்களின்படி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.


 






விபத்திற்கான காரணம் என்ன?


ஒரே இருப்புப் பாதையில் இரண்டு ரயில்களும் பயணித்ததாகவும், அதன்படி முன்னே சென்ற பயணிகள் ரயிலின் மீது சரக்கு ரயில் மோதியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ரயில்களும் ஒரே நேரத்தில் ஒரே இருப்புப் பாதையில் பயணித்தது எப்படி என்பது தொடர்பாக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. காஞ்சன்ஜங்கா ரயில் மோதலுக்கு சீல்டா ரயில் நிலையத்தில் அரசாங்கம் உதவி மையத்தை அமைத்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அறியலாம்.


033-23508794
033-23833326


மம்தா பானர்ஜி டிவீட்:


போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சற்று முன் கஞ்சன் ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 






ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “NFR மண்டலத்தில் எதிர்பாராத விபத்து. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்பில் செயல்படுகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.