Wagh Bakri Director: தொழிலதிபரும், வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பராக் தேசாய், தனது குடியிருப்பு அருகே தெரு நாய்கள் தாக்கியதில், கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்தார்.


தெருநாய்கள் தாக்குதல்:


குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பராக் தேசாய், வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று வீட்டு வாசலில் தன்னைத் தாக்கிய தெரு நாய்களை விரட்ட முயன்றபோது,  தேசாய் கீழே விழுந்து காயமடைந்தார். அங்கிருந்து வாட்ச்மேன் இந்த நிகழ்வை கண்டதும் தேசாயின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:


ஷெல்பி மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு, அறுவ சிகிச்சைக்காக தேசாய் ஜைடஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக ஞாயிறன்று தேசாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






குவியும் இரங்கல்:


தேசாயின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ஷக்திசிங் கோஹில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ மிகவும் சோகமான செய்தி வருகிறது. இயக்குநரும் உரிமையாளருமான வாக் பக்ரி டீ காலமானார். மூளைச்சாவு அடைந்த அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த வாக் பக்ரி குடும்பத்திற்கும் எனது இரங்கல்கள்" என தெரிவித்துள்ளார்.


யார் இந்த பராக் தேசாய்:


தேசாய் வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ராசேஷ் தேசாய் என்பவரின் மகன் ஆவார். 49 வயதான இவருக்கு விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவத்துடன், குழுமத்தின் சர்வதேச வணிகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு தலைமை தாங்கினார். இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில் தளங்களில் தீவிரமாக களமாடினார். இந்திய தொழில்துறையின் மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.