தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது நல்கொண்டா மாவட்டம். இந்த மாவட்டத்தில் முனுகோடு சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இன்று அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.


இது மட்டுமின்றி பீகார் மாநிலத்தில் உள்ள மோகமா மற்றும் கோபல்கஞ்ச் சட்டமன்ற தொகுதிகளுக்கும், மகாராஷ்ட்ராவில் உள்ள அந்தேரி கிழக்கு தொகுதியிலும், ஹரியானா மாநிலத்தில் உள்ள அதம்பூர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகரண்ணாத் தொகுதியிலும், ஒடிசா மாநிலத்தின் தாம்நகரிலும் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தொகுதிகளிலும் துணை ராணுவப் படையினரும், அந்தந்த மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






தெலங்கானா மாநிலத்தின் முனுகோடு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முனுகோடு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 855 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆணகள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 720 நபர்களும், பெண்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 128 நபர்களும் ஆவார்கள்.




மொத்தம் 298 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முனுகோடு தொகுதியில் 105 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக கருதப்படுகிறது. இந்த இடைத்தேர்தலுக்காக 1192 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 596 விவி பேட்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 596 கட்டுப்பாடு யூனிட்கள் செயல்பட்டு வருகின்றனர்.


துணை ராணுவப்படையினருடன், 3 ஆயிரத்து 365 காவல்துறையினரும் பணியாற்றி வருகின்றர். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 3 வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.




இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்கு காரணமான பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகோபால் ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ராஜகோபால் ரெட்டிக்கும், டி.ஆர்.எஸ். கட்சியின் வேட்பாளர் ஸ்ரவந்தி ரெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  இடைத்தேர்தல் நிறைவு பெற்ற பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் நல்கொண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு தனி அறையில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட உள்ளது.


மேலும் படிக்க : பெண்களுக்காக பிரத்யேகமாக மொஹல்லா மருத்துவமனைகள் தொடக்கம்.. முதல்கட்டமாக 100 மருத்துவமனைகள் தொடக்கம்..


மேலும் படிக்க : Stalin-Mamata Press Meet: சென்னை வந்துவிட்டு சகோவை பார்க்காமல் எப்படி செல்வேன்? - ஸ்டாலின் சந்திப்புக்கு பின் மம்தா