டெல்லியில் பெண்களுக்கு என பிரத்யேகமாக மொஹல்லா மருத்துவமனைகள் (மக்கள் மருத்துவமனைகள்) தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இதனை இன்று திறந்து வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் பகிர்ந்த பதிவில், "டெல்லி வாழ் பெண்களுக்கு ஒரு நற்செய்தி. டெல்லி மருத்துவ சேவையில் இன்னொரு புதிய முயற்சி இன்று  தொடங்கப்படுகிறது. அரசாங்கம் பெண்களுக்கு என சிறப்பு மொஹல்லா மருத்துவமனைகளைத் தொடங்கப்பட்டுள்ளது. இங்கே பெண்கள் அவர்களுக்கான சிகிச்சைகள், பரிசோதனைகள், மருந்துகள் என எல்லாவற்றையும் இலவசமாகப் பெறலாம்" என்று பதிவிட்டுள்ளார்.






என்ன சிறப்பு?
டெல்லியில் கேஜ்ரிவால் தொடங்கி வைதுள்ள பெண்களுக்கான பிரத்யேக மொஹல்லா மருத்துவமனைகளில் மருத்துவர்களும், ஊழியர்களும் பெண்களாகவே இருப்பார்கள். முதல் கட்டமாக 100 மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். இந்த திறப்பு வி்ழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால்,  "இன்று டெல்லியில் 4 மகளிர் சிறப்பு மொஹல்லா மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கே பெண்கள் நல சிகிச்சைகள், சேவைகள், மருந்துகள், பரிசோத்னைகள் என எல்லாமே இலவசமாகக் கிடைக்கும். இங்கே 12 வயதுக்குக் கீழ் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் " என்றார். 


கேஜ்ரிவாலின் வெற்றி ரகசியம்:
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தபோதே ஒரு மெகா வெற்றியுடன் தான் தடம் பதித்தது. தொடர்ந்து இரண்டு முறை அங்கு ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி பஞ்சாப் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இப்போது குஜராத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. 27 ஆண்டுகளாக குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள பாஜகவை அசைத்துப் பார்க்க ஆயத்தமாகி வருகிறது. குஜராத்துக்கு பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் டெல்லி மாடல் ஸ்கூல் பற்றியும் மொஹல்லா மருத்துவமனைகள் பற்றியும் தான் கேஜ்ரிவால் பேசி வருகிறார். அதுதான் அவரது வெற்றியின் ரகசியம் என்பதிலும் ஐயமில்லை.


அந்த வகையில், கேஜ்ரிவாலின் வெற்றிக்கு அவரது அரசின் குறிப்பிடத்தக்க சாதனை என்பது மொஹல்லா கிளினிக் திட்டம். டெல்லி மக்களுக்குச் செலவில்லாமல் மருத்துவ வசதி தரும் சமுதாய ஆரம்ப சுகாதார மையம். இந்த அரசு மருத்துவ மையங்கள் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. பல்வேறு சர்வதேச தொண்டு அமைப்புகளும் இந்தத் திட்டத்தைப் பாராட்டியுள்ளன. அடித்தட்டு, நடுத்தர வாக்காளர்களைக் கவர்ந்த மொஹல்லா கிளினிக் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் புற நோயாளிகளுக்குப் பெருமளவு உதவியது.


எனினும் நாள்பட்ட சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்குத் தேவையான மேல் சிகிச்சை மற்றும் அதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் டெல்லி மக்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இந்நிலையில் தான் டெல்லியில் பெண்களுக்கு என பிரத்யேகமாக மொஹல்லா மருத்துவமனைகள் (மக்கள் மருத்துவமனைகள்) தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் இது பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.