டெல்லியை சேர்ந்த பார்வை குறைப்பாடு உள்ள அரசுப்பள்ளி ஆசிரியை யூபிஎஸ்சி தேர்வில் 48 வது இடத்தை பெற்றுள்ளார்.


பிறவியிலேயே  பார்வை குறைபாடு :


டெல்லிக்கு அருகில் ராணி கேரா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஆயுஷி. பிறவியிலேயே பார்வை குறைபாட்டுடன் பிறந்தவர். அவர் தனது கிராமமான ராணி கேராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர், இக்னோவில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.தற்போது டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.ஆயுஷுக்கு தற்போது வயது 29.


குடும்பம் :


ஆயுஷியின் தந்தை பஞ்சாபில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. ஆயுஷிக்கு திருமணமாகிவிட்டது. அவரது  கணவர் தற்போது ஆஸ்திரேலியாவில் எம்பிஏ படித்து வருகிறார்.




யூபிஎஸ்சி கனவு :


ஆயுஷி இளம் வயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்டவர். சாதரண குடும்ப பின்னணி கொண்ட ஆயுஷிக்கு எப்போதுமே பாதுகாப்பான வேலை என்பதுதான் இலக்காக இருந்திருக்கிறது. இதற்காக  அவர் யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக விரும்பியிருக்கிறார். அதற்கு பக்க பலமாக இருந்தவர் அவரது அம்மா என பெருமிதம் தெரிவிக்கிறார்.


அம்மாவிற்கு சமர்ப்பணம் :


”என் கனவு நனவாகிவிட்டது. முதல் 50 பேர் கொண்ட பட்டியலில் என் பெயர் இருக்கிறது என்பதை நான் அதிசயமாகத்தான் பார்க்கிறேன். நான் 48  வது இடத்தை பிடிப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.எல்லோரும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன், நான் சிவில் சர்வீசஸ்களுக்குத் தயாராகும் போது எனது வேலையையும் தொடர விரும்பினேன். எனக்காக என் அம்மா வேலையை விட்டுவிட்டு உதவியாக இருந்தார். இந்த வெற்றியை என் அம்மாவிற்காக நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.இதில் கஷ்டங்கள் எப்பொழுதும் இருக்கும் ஆனால் என் அம்மா மற்றும் குடும்பத்தினரின் ஆதரவால் என்னால் அவற்றை சமாளிக்க முடிந்தது ”என பெருமிதமாக தெரிவிக்கிறார்.


 கல்வி என்பது அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி :


கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியையாக இருந்த ஆயுஷி, எம்சிடி பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்ப பள்ளி ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கினார். 2019 ஆம் ஆண்டு டெல்லி சபார்டினேட் சர்வீசஸ் செலக்ஷன் போர்டு (டிஎஸ்எஸ்எஸ்பி) தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் வரலாற்று ஆசிரியராக தனது தற்போதைய பணியை மேற்கொண்டார். தற்போது, ​​முபாரக்பூர் தாபாஸ் எண் 2ல் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கிறார்.கல்வி என்பது அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி என்கிறார் ஆயுஷி.




பார்வையை மாற்ற வேண்டும்:


”நான் குறிப்பாக பெண் கல்விக்காக உழைக்க விரும்புகிறேன் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த மக்களின் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். இயலாமையுடன் எந்த களங்கமும் தொடர்புபடுத்தக்கூடாது. ஊனத்தைப் பற்றிய சமூக அணுகுமுறையை மாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைத்து இலக்குகளையும் அடைய முடியும்,” என முன்மாதிரியாக திகழ்கிறார் ஆயுஷி.