இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாக இருந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட்ட் செய்து விமான சேவை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


எதிரெதிர் திசையில் ஓடிய விமானம்:


கடந்த ஜனவரி 7ம் தேதி பெங்களூருவிலிருந்து கொல்கத்தா செல்லும், இண்டிகோ நிறுவனத்தின் 6இ 455 விமானம் மற்றும் பெங்களூருவிலிருந்து புவனேஸ்வர் செல்லும் 6இ 246 விமானமும் பெங்களூரு விமான நிலையத்தின் வடக்கு மற்றும் தெற்கு ஓடு பாதையில் தயாராக இருந்தது. கொல்கத்தா செல்லும் விமானத்தில் 176 பயணிகளும், புவனேஸ்வர் செல்லும் விமானத்தில் 238 பயணிகள் மற்றும் பணியாளர்கள் 6 பேர் என்று மொத்தம் 426 பேர் இருந்தனர். ஒரு ஓடுதளம் விமானம் புறப்படுவதற்கும், மற்றொரு ஓடுதளம் தரையிறங்கவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 7ம் தேதி பணியில் இருந்த கட்டுப்பாட்டாளர் ஒரே பாதையை வருகைக்காகவும், புறப்படவும் பயன்படுத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து மற்ற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. விமானம் பறப்பதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில், எதிரெதிர் திசையில் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. 




3000 அடி உயரத்தில் நடக்கவிருந்த விபத்து:


இரண்டு விமானங்களும் 3000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் மோதிக்கொள்ளவிருந்த நிலையில், ரேடார் கட்டுப்பாட்டாளர் எச்சரித்ததையடுத்து இரண்டு விமானங்களின் திசைகளும் மாற்றப்பட்டது. இதனால் நடுவானில் இருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பொதுவாக இரண்டு விமானங்கள் பறந்துகொண்டிருக்கும்போது இரு விமானங்களுக்கிடைப்பட்டதூரம் 1000 அடியாகவும், 3 நாட்டிகல் மைல் தொலைவாகவும் இருக்கும். ஆனால், இந்த சம்பவத்தின் போது இருவிமானங்களுக்கு இடைப்பட்டதூரம் 100 அடியாகவும் 0.9 நாட்டிகல் மைலாகவும் இருந்தது. ரேடாரால் கவனிக்கப்படாமல் இருந்திருந்து, விமானங்கள் திசை திருப்பப்படாமல் இருந்திருந்தால் நடுவானில் மிகப்பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.




துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு:


இதனையடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு விமானத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. விசாரணையில், தெற்குப் பகுதியில் இருந்த விமான கட்டுப்பாட்டாளர், ரேடார் கட்டுப்பாட்டளரிடம் அனுமதி பெற்றபின் விமானம் பறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், வடக்குப் பகுதியில் இருந்த கட்டுப்பட்டாளர் ரேடார் கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி பெறமலேயே புவனேஸ்வர் விமானம்  பறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இது தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.




உரிமம் சஸ்பெண்ட்:


இதனையடுத்து விமான கட்டுப்பாடு அதிகாரியின் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.