கேரளாவைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் சேர்ந்து வாழ கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.


கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்தவர் 22 வயதான ஆதிலா நஸ்ரின். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் படிப்பதற்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அங்கு, கோழிக்கோடு மாவட்டம், தாமரைசேரி என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான பாத்திமாநூரா என்ற இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நட்பாக பழகிவந்த நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 


கேரளா திரும்பிய பிறகும் இவர்களிடையே தொடர்பு நாளுக்குநாள் அதிகரிக்க ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். சில மாதங்களுக்கு முன் ஆதிலா நஸ்ரின், பாத்திமாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக கோழிக்கோடு சென்றுள்ளார். இருவரும் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் தங்கியுள்ளனர். இது குறித்து அறிந்த இருவரின் குடும்பத்தினரும் கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், காவல்துறையினர் தலையீட்டால் இருவரையும் அவர்களின் பெற்றோர் பிரித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 




இதையடுத்து, ஆதிலா, பாத்திமாவுடனான தனது ஒரே பாலின உறவு குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அந்த பதிவில், தனது தோழியின் குடும்பத்தினர் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், தன்னைத் திரும்ப அழைத்து வர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பதிவிட்டார். 


மேலும், நுாராவை பிரிந்து வாழ முடியாமல் தவித்த ஆதிலா, கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். அதில், 'நானும் பாத்திமா நூராவும் சேர்ந்து வாழ தீர்மானித்து உள்ளோம். ஆனால், தற்போது அவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறி யுள்ளார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினோத் சந்திரன், பாத்திமா நூராவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோழிக்கோடு காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, நூராவை காவல்துறையினர் நேற்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார் அப்போது, தாங்கள் இருவருட இணைந்து வாழ விரும்புவதாக தெரிவித்தனர். 


இதையடுத்து, இருவரையும் சேர்ந்து வாழ நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் சி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அனுமதி வழங்கியது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண