விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் நடக்கும் அரவிந்தரின் 150 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் நாளை 7ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 8ம் தேதி இரண்டு நாட்களுக்கு ஆரோவில் நகரத்திற்குள் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் நுழைய காவல்துறை தடை விதித்துள்ளது.
ஆரோவில் வரும் குடியரசுத் தலைவர்:
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க நாளை 7ம் தேதி புதுச்சேரி வர உள்ளார். நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடையும் குடியரசு தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார். பகலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரௌபதி முர்மு நாளை மறுநாள் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆரோவில் சர்வதேச நகரத்தில் உள்ள குளோபலில் தியானம் செய்கிறார். பின்னர் அங்கு ஓவிய கண்காட்சிகளை பார்வையிடுகிறார். பாரதி நிவாஸில் ஏற்பாடு செய்துள்ள கலை இலக்கிய மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.
பின்னர் மதிய உணவுக்கு பின் ஆரோவில் வாசிகளுடன் உரையாடுகிறார். தொடர்ந்து அரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழா சார்பில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். காலை 11 மணிக்கு ஆரோவில் வரும் குடியரசுத் தலைவர் மாலை வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில் ஆரோவில் நிர்வாக செயலர் ஜெயந்தி ரவி தலைமையில் ஆரோவில் நிர்வாகத்தினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குடியரசு தலைவர் வருகையொட்டி இன்று நாளை 7ம் தேதி 8ம் தேதி வரை பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரோவில் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ஆரோவில் குலோப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்கும் தியானமும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்:
இந்நிலையில் புதுவை தமிழக எல்லையான கோரிமேட்டிலிருந்து ரோவில் வரை 1200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மண்டலம் ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர். புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலையில் இருந்து ஆரோவில் வரை சாலையின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள், ரிசார்டுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் மாநில எல்லைப் பகுதிகளான கோட்டக்குப்பம் ஈசிஆர் சாலை புதுவை திண்டிவனம் பைபாஸ் சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியாக வரும் நபர்கள் உரிய விசாரணைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர். குடியரசுத் தலைவர் புதுவை மற்றும் ஆரோவில் பகுதிக்கு வருவதையொட்டி சாலைகள் மற்றும் பல்வேறு இடங்கள் பளபளப்பாக ஜொலித்து காணப்படுகிறது.