விசாகப்பட்டினத்தில் 21 வயது மாணவி தனது தேர்வில் கலந்து கொள்வதற்காக சம்பாவதி ஆற்றை தனது இரு சகோதரர்களின் உதவியுடன் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் 21 வயதான தட்டி கலாவதி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கஜபதி நகரம் அருகே இருந்த மர்ரிவலசை கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்தநிலையில், கலாவதிக்கு கடந்த சனிக்கிழமை தேர்வு ஒன்று இருந்துள்ளது. சரியாக அந்த நேரத்தில் இவர்கள் கிராமம் முழுவதும் கனமழை பெய்ததால் அருகில் இருந்த சம்பாவதி ஆறு நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களது கிராமத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படியாவது தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்று எண்ணிய கலாவதி வெள்ளிக்கிழமை விசாகிற்குச் சென்று சனிக்கிழமை தேர்வில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.
இதனை தனது குடும்ப உறுப்பினர்களிடம் கலாவதி வெளிபடுத்த, தங்கையை எப்படியாவது தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று கலாவதியின் இரண்டு சகோதரர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து, தங்கையை சம்பாவதி ஆற்று கரைக்கு அழைத்து வந்த இருவரும், திடீரென தனது சகோதரியை தோளில் தூக்கினர்.
கலாவதியின் சகோதரர்கள் அவளைத் தங்கள் தோளில் சுமந்து கொண்டு இடுப்பு அளவு உள்ள ஆற்றின் மற்றொரு பக்கத்திற்கு அழைத்து வந்தனர். அதே நேரத்தில் கலாவதியும் ஓடும் நீரில் அவ்வபோது மாட்டிக்கொண்டு சிரமப்பட்டார். அதைத் தொடர்ந்தும் அவரது சகோதரர்கள் அவளுக்கு தேர்வில் தேர்ச்சி பெற ஆற்றைக் கடக்க உதவ முடிவு செய்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கனமழை காரணமாக வட கடலோர ஆந்திரப் பகுதிகளில் பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆந்திராவில் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.