மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் வீட்டின் அருகே கடத்தி செல்லப்பட்ட 12 வயது மகளை தந்தையான கூலி தொழிலாளி உத்தரப் பிரதேசத்தில் மீட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்தை விவரித்த காவல்துறை அலுவலர், "குற்றம் சாட்டப்பட்டவர் ஷாஹித் கான் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாந்த்ராவில் உள்ள ஆடை உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அதே பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் செப்டம்பர் 4 ஆம் தேதி ஷாப்பிங்கிற்கு தன்னுடன் வரும்படி சிறுமியைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குப் பதிலாக அவரை குர்லாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து சூரத்திற்கு ஒரு பேருந்தின் மூலமும் பின்னர் ரயிலில் மூலமாக டெல்லியை அடைந்துள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறும் முன், சிறுமி தனது தாயிடம் சில காரணங்களைச் சொல்லிவிட்டு வெளியேறியுள்ளார். நேரம் ஆன பின்பும், திரும்பி வராததால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கூலித் தொழிலாளியான சிறுமியின் தந்தை, அக்கம் பக்கத்தினர் மற்றும் உள்ளூர் மக்களிடம் விசாரித்து, காவல்துறையின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்துள்ளார். 'டேக்கன்' படத்தில் லியாம் நீசனின் கதாபாத்திரத்தைப் போலவே, மகளை தந்தை மீட்டுள்ளார்.
அவர் அலிகார் அருகே உள்ள ஐட்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, உள்ளூர் காவல்துறை மற்றும் கிராமவாசிகளின் உதவியுடன் சிறுமியை காப்பாற்றியுள்ளார்" என்றார்.
"குற்றம் சாட்டப்பட்டவர் சூரத்திற்கு செல்லும் பேருந்தில் குடிபோதையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக என் மகள் கூறினார்" என சிறுமியின் தந்தை கூறியுள்ளார். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிவு 363 (கடத்தல்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெற்றவுடன் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படும் என நிர்மல் நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.