காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெளிப்படைத்தன்மையாகவும் நேர்மையாகவும் நடத்தக் கோரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு ஐந்து காங்கிரஸ் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியலை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காங்கிரஸின் மக்களவை உறுப்பினர்களான சசி தரூர், கார்த்தி சிதம்பரம், மனிஷ் திவாரி, பிரத்யுத் போர்டோலோய் மற்றும் அப்துல் கலீக் ஆகியோர் கூட்டாக எழுதிய கடிதத்தில், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளனர்.
மிஸ்திரிக்கு அனுப்பப்பட்ட செப்டம்பர் 6 தேதியிட்ட கடிதத்தில், "கட்சியின் உள்விவரங்கள் அடங்கிய ஆவணத்தை வெளியிட்டு அதில் உள்ள தகவல்கள் தவறாக பயன்பட்டுவிட வாய்ப்பாக அமைந்திட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன், கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் (சிஇஏ), வாக்குரிமை உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
வேட்பாளரை பரிந்துரைக்க யாருக்கு உரிமை உள்ளது, யார் வாக்களிக்கத் தகுதியுடையவர் என்பது சரிபார்க்கப்பட்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல்களை பொதுவெளியில் வெளியிடுவது தொடர்பாக கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், இந்தத் தகவலை அனைத்து வாக்காளர்கள் மற்றும் சாத்தியமான வேட்பாளர்களுடன் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொறிமுறையை அது ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்காளர், பட்டியலைச் சரிபார்க்க நாடு முழுவதும் உள்ள அனைத்து 28 மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் 9 யூனியன் பிரதேச பிரிவுகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது தேர்தல் செயல்பாட்டில் இருந்து தேவையற்ற தன்னிச்சையான செயல்களை அகற்றும்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலில் வெளிப்படைத் தன்மை அவசியமான ஒன்று. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில், எங்களது கவலை தொடரும். இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், கட்சியின் தலைவருக்கான தேர்தலில் வெளிப்படைத்தன்மை, நேர்மை குறித்து அக்கறை கொண்டுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020-இல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ளக்கோரி கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவில் தரூர், திவாரி ஆகியோர் அடங்குவர். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து தரூர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.