விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் உயிரை காப்பதற்கு தேவையான சிகிச்சைக்கான நிதியை திரட்டியுள்ளனர்.
மிகவும் அரிதான இந்த மரபணு நோயால் அயான்ஷ் குப்தா என்ற சிறுவன் பாதிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க 'ஜொல்கென்ஸ்மா' என்ற மருந்து தேவைப்பட்டது. இந்த மருந்தின் விலை சுமார் 16 கோடி ரூபாய், உலகின் மிக அதிக விலை கொண்ட மருந்தாக இது கருதப்படுகிறது. இந்த நிலையில் சிறு குழந்தையான அயான்ஷ் குப்தாவை, காப்பாற்ற நினைத்த பெற்றோர் சமூகவலைத்தளங்களில் நிதியுதவி தேவை என்ற பிரேச்சாரத்தை முன்வைத்தனர். ட்விட்டர் வலைத்தளத்தில் 'AyaanshFightsSMA' என்றார் புதிய ட்விட்டர் பக்கத்தை துவங்கி அதில் உதவி குரல்களை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் அயான்ஷ் குப்தா சிகிச்சைக்கு தேவையான ஜொல்கென்ஸ்மா மருந்தை வாங்குவதற்கான நிதியை வெற்றிகரமாக திரட்டியுள்ளதாக சிறுவனின் பெற்றோர்கள் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளனர்.
"நாங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லை அயான்ஷை காப்பாற்றும் இந்த கடினமான பயணம் இவ்வளவு அற்புதமாக நிறைவடையும் என்று, மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம் சிகிச்சைக்கான மருந்தை வாங்க தேவையான 16 கோடி ரூபாயை அடைந்துவிட்டோம். உதவி ஆதரவளித்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள், இது உங்களின் வெற்றி" என தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் அயான்ஷின் பெற்றோர்.
மேலும் நிதியுதவி அளித்து, நிதியை திரட்ட உதவிய விராட் கோஹ்லி அனுஷ்கா ஷர்மாவிற்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர். "ஒரு ரசிகனாக எப்போதுமே உங்களை விரும்புகிறோம், ஆனால் அயான்ஷிற்காக நீங்கள் செய்த உதவியும், மேற்கொண்ட பிரச்சாரமும் நாங்கள் எதிர்ப்பார்க்காதது. உங்கள் கொடை உள்ளதிற்கு நன்றிகள். வாழ்க்கைக்கான போட்டியில் சிக்சர் அடித்து எங்களை வெற்றி பெற செய்துள்ளீர்கள். நீங்கள் செய்த உதவிக்கு என்றுமே நாங்கள் கடன்பட்டவர்கள்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
விராட் கோஹ்லி, அனுஷ்கா ஷர்மா எவ்வளவு தொகை வழங்கினார்கள் என்பதை வெளியிடாத சூழலில், சிறுவன் உயிரை காப்பாற்றியதில் இவர்களின் பங்கு முக்கியமானது என மட்டும் குறிப்பிட்டுள்ளனர். கோஹ்லி, அனுஷ்கா தவிர்த்தும் பல பிரபலங்கள் உதவி கரம் நீட்டியுள்ளனர். சாரா அலிகான், அர்ஜுன் கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோரும் சிறுவன் உயிரை காப்பதற்காக நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது...