இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு முனைப்பு காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஏற்கெனவே தடுப்பூசி பற்றாகுறை காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி தொடர்பாக சமூக வலைத்தளங்கள் பரப்பப்படும் போலியான செய்திகளும் மக்களை தடுப்பூசி செலுத்த விடாமல் செய்து வருகிறது. 


அந்தவகையில் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஒரு புதிய போலி செய்தி பரவி வருகிறது. இது குறித்து அசாம் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "நோபல் பரிசு பெற்ற பிரான்சு விஞ்ஞானி ஒருவர் தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவரும் அடுத்த 2 ஆண்டுகளில் மரணம் அடைவார்கள்..." என்று சொன்னதாக போலி செய்தி பரவி வருதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதிரியான போலி செய்திகளை மக்கள் நம்பி மற்றவர்களுக்கு பகிர கூடாது. ஏனென்றால் போலி தகவல் பரிமாற்றம் இந்த கொரோனா வைரஸைவிட கொடிய நோய் என்று அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது. 






எனவே இதுபோன்ற போலி செய்திகளை மக்கள் பகிர்வதற்கு முன்பாக நன்றாக சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அசாம் காவல்துறை முன்வைத்துள்ளது. ஏற்கெனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி செலுத்த கூடாது என்பது போன்ற போலி செய்திகள் பரவி வந்தன. இதற்கு எதிராக மத்திய அரசு ஒரு பதிவை செய்திருந்தது. அதில் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் ஏற்கெனவே தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் இது மாதிரியான போலிச் செய்திகள் தடுப்பூசி செலுத்த விரும்புவர்களை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற செய்திகளை மக்கள் போதுமான புரிதல் இன்றி சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது என்பதே அரசின் எண்ணமாக உள்ளது.