Viral Video : ரேஷன் கார்ட்டில் தனது பெயர் தத்தாவை ’குத்தா’ மாற்றி அச்சடிக்கப்பட்டதால், அதனை திருத்தக் கூறி அரசு அதிகாரி முன், ஒருவர் நாய் போன்று குரைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்தி குமார் தத்தா. இவருக்கு ரேஷன் கார்டில் தனது பெயரான ஸ்ரீகாந்தி குமார் தத்தா  என்பதற்குப் பதிலாக ஸ்ரீகாந்தி குமார் ‘குட்டா’ என்று தவறாக எழுதப்பட்டிருந்தது . இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் (பிடிஓ) மாற்றவதற்கு சென்றார். அப்போது  வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட இருந்தார் . அந்த சமயத்தில் அவரது காரை மறித்து தனது கோரிக்கையை வித்தியாசமாக ஆத்திரத்துடன் முறையிட்டார். தனது புகார் மனுவை அவரிடம் நீட்டி பல நொடிகள் நாய் போன்று குரைத்து காட்டி புகார் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






அந்த நபர் தனது புகார் மனுவை  அதிகாரியிடம் கொடுக்கும்போது, ​​ஒரு நாயைப் போல தீவிரமாக குரைத்துள்ளார். நாய் போன்று குரைத்து இந்த பெயர் மாற்றியதை திருத்தி தர  வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த அரசு அதிகாரி காருக்குள் அமர்ந்து அந்த நபர் கொடுக்கும் மனு நகலை வாங்கினார்.  மனுவை கொடுத்த அந்த நபர் ஒரு வார்த்தை கூடு பேசவில்லை. நாய் போன்று குரைக்க மட்டுமே செய்தார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்களை வியக்கச் செய்தது. பின்பு, ஒரு நிமிடம் எதும் தெரியாமல் திகைத்து போன அரசு அதிகாரி, மனுவை வாங்கி படித்து சரி செய்து தருவதாக கூறி அந்த இடத்தை விட்டு சென்றார்.


தகவல்களின்படி, அந்த நபர் தனது பெயரை மாற்ற பலமுறை பாங்குரா மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரியிருந்தார். ஆனால் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசின் அலட்சிய போக்கிற்கு அவர் மிகவும் வருந்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஸ்ரீகாந்தி என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார்.


அதில் அவர் கூறியதாவது, ”ரேஷன் கார்டில் தனது பெயரைத் திருத்த மூன்று முறை விண்ணப்பித்தேன். “மூன்றாவது முறை என் பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்குப் பதிலாக ஸ்ரீகாந்தி குத்தா என்று எழுதப்பட்டது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்,” என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.






பின்பு அவர் கூறியதாவது, ”எங்களைப் போன்ற சாமானிய மக்கள் எத்தனை முறை இதுபோன்ற திருத்தத்திற்கு விண்ணப்பிப்போம். இதனால் எங்களது அன்றாட வேலை பாதிக்கப்படுகிறது” என வருத்தத்துடன் கூறியதாக சொல்லப்படுகிறது. குத்தா என்றால் இந்தி மொழியில் நாய் என்று கூறப்படுகிறது.