கர்நாடக மங்களூருவில் ஆட்டோ வெடித்தது திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என விசாரணைக்குப் பின் மாநில டிஜிபி ட்வீட் செய்துள்ளார். 


கடலோர கர்நாடகாவான மங்களூருவில் இன்று சந்தேகத்திற்குரிய வகையில் ஆட்டோரிக்சா ஒன்று வெடித்துள்ளது. இதில், ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மக்கள் அமைதியாக இருக்குமாறு போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. 


காரணம் என்ன..?


மக்கள் பீதியடைய வேண்டாம் என மங்களூரு காவல்துறை தலைவர் என். சசிகுமார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "தொடக்க கட்ட விசாரணை நடைபெற்று வருவதால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. தீயை கண்டறிந்ததாக அந்த ஆட்டோ ஓட்டுநர் கூறி உள்ளார். அவர்கள் (ஓட்டுனர் மற்றும் பயணிகள்) சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இப்போது பேச முடியவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பீதி அடையாமல் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களிடம் பேசியவுடன் புதிய தகவல்களை பகிர்வோம்" என்றார்.


போலீஸ் விசாரணை:


கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தின் அருகே உள்ள சாலையில் வந்து நின்ற ஆட்டோரிக்ஷா வெடித்துச் சிதறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. ஆட்டோவில் சென்ற பயணி ஒருவர் பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்றதாகவும், அதுவே தீப்பிடித்து வாகனத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது.






இதுகுறித்து மங்களூரு காவல்துறை கூறுகையில், "பயணிகள் வைத்திருந்த பையில் உள்ள பொருள்களை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தடயவியல் குழு அந்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது" என தெரிவித்தது.


டிஜிபி ட்வீட்


இந்நிலையில் ஆட்டோ வெடித்தது திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என விசாரணைக்குப் பின் மாநில டிஜிபி ட்வீட் செய்துள்ளார். அதில் இது விபத்து இல்லை. பெரும் சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட தீவிரவாதச் செயல் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கர்நாடக காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


கோவை சம்பவம் :


சமீபத்தில், தமிழ்நாட்டில் கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


இதனிடையே, காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. 


பின்னர், காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. 


கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் நடத்திய விசாரணையில்தான், இது தற்கொலை படை தாக்குதல் என்பது தெரிய வந்தது.