புலிக்கு வழிவிட காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்கப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் மனிதர்களையும் காக்க வேண்டும் வனவிலங்குகளையும் காக்க வேண்டும். அரசுக்கு இது மிகப்பெரிய சவால். அதற்காக அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.


மனித விலங்கு மோதல்களை ஐந்து வகைப்படுத்துகின்றனர். காடுகளையும் காட்டோர பகுதிகளையும் வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மக்கள் அந்த வாழ்க்கையில் விலங்குகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். விலங்குகளை கடத்தி விற்பனை செய்பவர்கள். மூன்றாவது, விலங்குகள் சாலை, ரயில் பாதைகளில் சிக்கி உயிரிழத்தல். நான்காவது இயற்கை சுற்றுலா (ஈகோ டூரிஸம்) என்ற பெயரில் இயற்கைக்கும் வனவிலங்குகளுக்கும் ஊறு விளைவித்தல். கடைசியாக வனம் அழிக்கப்படுவதால் ஊருக்கும் நுழையும் வனவிலங்குகள். இந்த ஐந்து பிரச்சனைகளும் தான விலங்கு மனித மோதலில் முக்கியமானவை.


வைரல் வீடியோ:


இந்நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் புலி ஒன்று சாலையைக் கடக்கிறது. அப்போது இருபுறமும் வாகனங்கள் வர போக்குவரத்துக் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். புலி பத்திரமாக கடந்து செல்லட்டும் அனைவருமே நிற்கவும் என்று சமிக்ஞை காட்டுகிறார். அதையும் மீறி சிலர் புலியைப் பார்த்ததும் பரவசமடைந்து வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படம் எடுக்க முயல்கின்றனர்.






ஆனால் அவர்களை எல்லாம் சைகையாலேயே கண்டித்து அவரவர் வாகனத்தில் அமரச் செய்கிறார். இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ப்ரவீன் காஸ்வான் ஐஎஃப்எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அந்த ட்வீட்டிற்கு புலிக்கு மட்டுமே பச்சைக் கொடி என்று தலைப்பிட்டுள்ளார்.


ப்ரவீன் கஸ்வான் ஐஎஃப்எஸ், இந்த ட்வீட் எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் சிலர் இது மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது எனக் கூறியுள்ளனர். இந்த வீடியோவை ப்ரவீன் கஸ்வான் ஐஎஃப்எஸ், பகிர்ந்ததில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் புலிகள்:


நம் நாட்டில்தான் உலகின் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் 18 மாநிலங்களில் மொத்தம் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என மொத்தம் 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.


1900களில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது. பின்னாட்களில் புலிகள், மெதுவாக தங்களின் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. 1972-ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள் தொகைக் கணக்கெடுப்பில் வெறும் 1,872 புலிகளே மிஞ்சி இருந்தது தெரியவந்தது.