ஜார்க்கண்ட் மாநிலத்தின் செக்டார் 4 பிரிவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் மேலாளரான அர்வித் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வங்கி நிர்வாகம் விடுப்பு அளிக்காததால் ஆக்சிஜன் சிலிண்டருடன் அவர் வேலைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின.

 

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில் பஞ்சாப் நேஷனல் வங்கியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கத் தொடங்கினர். இந்நிலையில், இதுதொடர்பாக நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டிருக்கிறது. பிஎன்பி வங்கியின் பொக்காரோ வட்ட அதிகாரி சார்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 


அதில் "கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நபரை வங்கி நிர்வாகம் பணிக்கு வரச்சொல்லி நெருக்கடி கொடுத்ததாகத் தகவல்களைப் பரப்புவது தவறு. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் அனைவருக்குமே பொருந்து வகையில், ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட ஊழியரின் நலனுக்காகவும், சக ஊழியர்கள் தொற்றுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் அரவிந்த் குமாரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

 

அர்விந்த் குமாரின் செயல்படாத சொத்துக்கள் (Non-Performing Assets-NPA) மீதான வங்கிக் கடன்களை வசூலிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அவர் இவ்வாறு நாடகமாடுகிறார். அவர் மீது விசாரணை நிலுவையில் இருப்பதால் அவரின் ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை. இதனால்தான் அவர் தனக்கு வங்கி நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதுபோல் நாடகமாடுகிறார். அவர் வங்கிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வருவதை அவருடைய குடும்பத்தினரே வீடியோவாக எடுத்துள்ளனர். அவர்களே உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

 


 

உண்மையறியாது, அரவிந்த்குமாரின் ஆக்சிஜன் மாஸ்க் நாடக வீடியோவைப் பகிர்ந்து உச்சுக்கொட்டி இலவச அட்வைஸ் வழங்கிய நெட்டிசன்கள் எல்லாம் இப்போது போஸ்ட்டை டெலீட் செய்கின்றனராம்.