தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தாக்கத்தைப் போல, புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை தாக்கம் தீவிரமாக காணப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்த மாநில சுகாதாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ புதுச்சேரி மாநிலத்தில் புதியதாக 9 ஆயிரத்து 118 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 788 நபர்களுக்கும், காரைக்காலில் 138 நபர்களுக்கும், ஏனாமில் 34 நபர்களுக்கும், மாஹேவில் 36 நபர்களுக்கும் என மொத்தம் 996 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், புதுச்சேரியில் 16 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என 21 பேர் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் ஆண்கள் ஆவர். 9 பேர் பெண்கள் ஆவர். இன்று 21 பேர் உயிரிழந்ததன் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 1,497 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்துள்ளனர்.




புதுச்சேரியில் கொரோனா இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 896 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இன்று வரை மருத்துவமனைகளில் மட்டும் 1,694 நபர்களும், வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 459 பேரும் என மொத்தமாக 13 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


புதியதாக 1,718 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து குணம் அடைந்து இன்று வீடு திரும்பினர். இதனால், மாநிலத்தில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. இதனால், புதுச்சேரியில் கொரோனாவால் குணம் அடைவோர் விகிதம் 85.76 சதவீமாக உள்ளது.


புதுச்சேரி மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 12 கொரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்றறில் 8 லட்சத்து 96 ஆயிரத்து 432 பரிசோதனைகளின் முடிவுகள் நெகடிவ் என்று வந்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 428 நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின் காரணமாகவே புதுச்சேரியில் கடந்த வாரம் ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது. மேலும், உயிரிழப்பு பாதிப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 


கொரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகிய காரணங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூபாய் 3 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மாநில அரசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.