உத்தரப்பிரதேசத்தில் சாலையைக் கடக்க முயன்ற குரங்கு ஒன்று குறுக்கே வந்த ஒரு பைக்கின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ள அதனை பொதுமக்கள் அன்புடன் மீட்ட சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் படாசாராய் பகுதியில் சாலையைக் கடக்க ஒரு குரங்கு காத்திருந்தது. திடீரென அந்த குரங்கு சாலையில் பாய அது சற்றும் எதிர்பாராமல் ஒரு பைக் அவ்வழியே வர குரங்கு பைக்கின் சக்கரத்துக்குள் சிக்கிக் கொண்டது. சக்கரத்தில் குரங்கு சிக்கிக் கொண்டதை உணர்ந்த இளைஞர் பைக்கை நிறுத்திவிட்டு அதைக் காப்பாற்ற முயன்றார். உடனே சுற்றி இருந்த பலரும் இணைந்து கொள்ள மெக்கானிக் வரவழைக்கப்பட்டு சக்கரத்தின் பிடிகள் தளர்த்தப்பட்டு குரங்கு விடுவிக்கப்பட்டது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
விலங்குகளும் சில வீடியோக்களும்..
இது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. யானைகள் எப்போதுமே கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய மிருகம். ஆனால் சில நேரங்களில் யானைக் கூட்டத்திலிருந்து தவறுதலாக குட்டிகள் திசை மாறிவிடும். அப்படியான நேரங்களில் குட்டிகளை வனத் துறை அதன் கூட்டத்தோடு சேர்த்து வைக்கும்.
அவ்வாறாக ஒரு வழிதவறிய யானைக் குட்டியை அதன் கூட்டத்தில் சேர்த்து வைத்துள்ளது வனத்துறை. அப்போது அந்த தாய் யானை வனத்துறை ஊழியர்களைப் பார்த்து நன்றி சொல்வதுபோல் தனது தும்பிக்கையை உயர்த்திக் காட்டுகிறது. சுசாந்த நந்தா என்ற இந்திய வனத் துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் கீழ் வீடியோவுக்காக தமிழக வனத்துறைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைப் பகிந்த அவர், “அந்த ஆசீர்வாதம்... குட்டியை தாய் யானையுடன் வனத் துறை அதிகாரிகள் இணைத்து வைத்தனர். அந்த தாய் யானை அதன் சொர்க்கபுரிக்குச் செல்லும் முன் அழகாக வாழ்த்திச் செல்கிறது. எத்தனை அழகு. தவறுவிடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
குரங்கின் புத்திசாலித்தனம்:
குரங்குகள் எப்போதுமே புத்திசாலியானவை. இப்படித்தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் தன் நோய்க்கு சிகிச்சை பெற குரங்கு ஒன்று மருத்துவமனைக்குச் சென்ற வீடியோ வைரலானது. பீகாரில் சசராம் பகுதியில் ஷஜமா என்ற இடத்தில் கிளினிக் ஒன்று உள்ளது. இதில் அகமது என்பவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது கிளினிக்கை தேடி பெண் குரங்கு ஒன்று சென்றுள்ளது. அது நேராக நோயாளிகளுக்கான படுக்கையில் சென்று படுத்து கொண்டது.
இதனை கவனித்த அகமது முதலில் பயந்துள்ளார். அந்த பெண் குரங்கின் முகமும் மிரட்சியுடன் காணப்பட்டது. அதன்பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர், தைரியம் வரவழைத்து கொண்டு குரங்குக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார். காயத்திற்கு மருந்து போட்டுள்ளார். டெட்டானஸ் ஊசியும் போட்டுள்ளார். முகத்தில் களிம்பு பூசியும் விட்டுள்ளார். இது அனைத்தும் நடக்கும் வரை அந்த குரங்கு அமைதியாக படுக்கையில் ஓய்வாக இருந்தது.