சமீப காலங்களாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்கள் அதிகமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் நடனமாடி கொண்டு இருக்கும் போதே மயங்கு விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியில் ஒரு பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பிராபாத் என்பவர் பங்கேற்றுள்ளார். இவர் அந்த விழாவில் பாடலுக்கு ஏற்ப நடனமாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து இவரை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 


 






அங்கு இவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் இவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அத்துடன் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


திடீர் மாரடைப்பு வர காரணம்:


ஒரு பக்கம்  உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் அதே வேளையில், அதிக அளவு உடற்பயிற்சி மேற்கொள்வது அதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


மேலும், டைப் 2 நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தல், குறைவான உடல் செயல்பாடு, குடும்ப வரலாறு, உடல் பருமன் போன்றவற்றால் இதய நோய்கள் வயது வித்தியாசமின்றி அதிகரித்துவருவதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.


தினசரி வாழ்க்கைமுறையை மாற்றுங்கள்:


வயதைப் பொருட்படுத்தாமல் ஒருவர் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதய நோய்களின் பங்களிப்பில் மன ஆரோக்கியமும் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்பெல்லாம், மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்டவரை முன் அறிகுறிகளுடன் வந்துகொண்டிருந்த நிலையில், எந்தவித அறிகுறிகளுமின்றி சமீப காலமாக ஏற்படும் மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் மரணங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.


 






இச்சூழலில் திடீரென ஏற்படும் இந்த மாரடைப்பு உயிரிழப்புகளைத் தடுக்க நம் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டுமெனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 



  1. புகைப்பிடிப்பதற்கு எவ்வளவு சீக்கிரம் குட்பை சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்லுங்கள்.

  2. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள், ஆனால் கூட, குறைய இல்லாமல் அளவாக செய்யுங்கள்.

  3. ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுங்கள்.அதிக உப்பு மற்றும் சர்க்கரையைக் குறையுங்கள். சரியான உடல் எடையைப் பேணுங்கள்.

  4. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் உறங்குங்கள். நல்ல உறக்கத்தை பேணுபவர்களுக்கு ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய்கள், மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகிறது.

  5. மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், பல உடலுக்கு கேடான பழக்கங்களுக்கு முதலில் வித்திடுவது மன அழுத்தமே.

  6. ரத்த அழுத்த அளவை தொடர்ந்து கண்காணியுங்கள், 18 - 39 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் ரத்த அழுத்த அளவை கண்காணியுங்கள்.

  7. இவை தவிர கொழுப்பு, சர்க்கரை அளவையும் கண்காணித்து சரிவர பேணுங்கள்.


உங்கள் அன்றாட வாழ்வில் இந்த 7 மாற்றங்களைக் கொண்டு வந்து இருதயத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.