மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர்க் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 10க்கும் மேற்பட்ட பசுமாடுகள் இன்று பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றன. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலதுசாரி அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றனர். காவல்துறையினரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. இதே போல நேற்று முன் தினம், கட்னி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டுச் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் பசுமாடுகள் படுத்திருந்ததால் ஏற்பட்ட விபத்தில் 12 மாடுகள் கொல்லப்பட்டதோடு, 3 மாடுகள் காயமடைந்துள்ளன. இந்த விபத்தால் சேற்றில் சிக்கிய லாரியும் சேதமடைந்துள்ளது.  




இதுபோன்று பசுக்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாதம் மட்டும் மத்திய பிரதேசத்தில் பசுக்களால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளது. சத்தர்பூர் பகுதியில் இளைஞர்கள் இருவர் இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது பசுமாடு ஒன்று குறுக்கே வர அதன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பியதில் எதிரே வந்த லாரியின் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து நடந்த அதே சத்தர்பூரில் அன்குர் அகர்வால் என்ற இளைஞரும், அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பசுமாடு ஒன்று குறுக்கே வரவே மாட்டின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் அன்குர் அகர்வாலின் தாய் தந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் அன்குர் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஹர்தா மாவட்டத்தில் ஜீலம் எக்ஸ்ப்ரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் பிராங்கி ரயில்வே கேட் அருகே வந்தபோது தண்டவாளம் அருகே படுத்திருந்த பசுமாடுகள் மீது மோதியதில் 13 பசுமாடுகள் தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அதேபோன்று டொயோட்டா ஃபார்ச்சுனர் காரில் ஒருவர் மத்தியபிரதேச சாலைகளில் திரியும் பசுமாடுகளைப் பற்றியும் அது போக்குவரத்துக்கு எப்படி இடையூறாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்த நிலையில், எதிரே இருந்து ஓடிவந்த பசுமாடு மீது மோதியதில் அந்த கார் முற்றிலும் உருக்குலைந்தது. காரினுள் இருந்த ஏர்பேக்குகளால் சிறிய காயங்களுடன் அந்த நபர் தப்பித்தார். இவையெல்லாம் சமீபத்தைய உதாரணங்கள். மத்திய பிரதேசத்தில் பசுக்களை வெட்ட தடை விதிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. பசுக்களை கடத்துவதாகக் கூறி பலர் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. பசுக்களை பாராமரிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் முக்கிய மந்திரி கவ்சேவா யோஜனா திட்டத்தை உருவாக்கியதோடு அதற்காக சுமார் 256 கோடி ரூபாயை செலவிட்டிருக்கிறது. ஆனால், பசுமாடுகள் கட்டுக்கடங்காமல் பெருக, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், நகர சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களில் சுற்றித்திருந்து கொண்டிருக்கின்றன. இதனால் பல நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், விபத்துகளும் அதிகரித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக பசுமாடுகள் சுற்றித்திரிவதால் மத்திய பிரதேச சாலைகள் வாகனஓட்டிகளுக்கு சிம்ம சொப்பனமாக ஆகியிருக்கின்றன என்று கூறப்படுகிறது.




மத்திய பிரதேசத்தில் பசுவைச் சுற்றியே பெரும்பாலும் அரசியல் நகர்கின்றது. அது கமல்நாத் தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, பிரிதிவிராஜ் சவுகான் தலைமையிலான பாஜக அரசாக இருந்தாலும் சரி. இந்தியாவிலேயே பசுக்களுக்கென தனி துறை இருப்பது மத்திய பிரதேசத்தில் தான். கமல்நாத் ஆட்சியில் இருந்தபோது திவாஸ் மாவட்டத்தில் முதல் பசுமடத்தைத் தொடங்கி வைத்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் இதே போன்று 1000 பசுமடங்களை திறப்போம் இது ஒரு லட்சம் பசுக்களை பாதுகாக்க உதவும் என்று கூறியிருந்தார். இதற்காக முதற்கட்டமாக சுமார் 50 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசுக்களை பாதுகாப்பதில் 16 அடி முன்னே பாய்ந்து அறிவிப்புகளை அள்ளிவிடுகின்றது. தற்போதைய நிலையில் மத்திய பிரதேசத்தில் சுமார் 2200 பசுமடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 1587 பசுமடங்களை அரசே நடத்துகிறது. இந்த பசுமடங்களில் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரம் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இவைகள் தவிர சுமார் 627 பசுமடங்கள் தனியார் நிறுவனங்களாலும் நடத்தபப்டுகின்றன. இதில் சுமார் 1 லட்சத்து 73 ஆயிரம் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன என்று தகவல்கள் உள்ளன. ஆனாலும் எப்படி இவ்வளவு மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.


மத்திய பிரதேசத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, இரு பக்கங்களில் இருந்தும் பசுமாடுகளை அடிக்க அவர்களிடம் இருந்து தப்பிக்க பசுமாடுகள் ஆற்றுக்குள் குதித்து உயிரை விட்டன. பசுக்களை பராமரிக்க முடியாததால் விவசாயிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. பசுக்கள் சாலையில் வருவோர் செல்வோரையும் அவ்வபோது பதம் பார்க்கும் நிகழ்வுகளும் தொடர்கதையாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  பசுமாடுகள்  தெருவில் திரிவதை கட்டுப்படுத்தாவிட்டால் அரசுக்கு பெரும்தலைவலியாகும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.