ஆன்லைனில் 169 ரூபாய்க்கு வாங்கிய இந்து கடவுள் சிலையை இயற்கையாக தோன்றியதாக கூறி கோயில் கட்டப்போவதாக வசூலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோவைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி, தனது நிலத்தில் இருந்து இந்து கடவுள்களின் சிலைகளைக் கண்டுபிடித்ததாகவும், அங்கு கோயில் கட்டுவதற்கு நன்கொடை கேட்டு, தனது கிராமத்தில் வசிப்பவர்களிடம் வசூல் வேட்டையில் இறங்கினார்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை உன்னாவோவில் உள்ள மஹ்முத்பூர் கிராமத்தில் உள்ள அசோக் குமார் மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தில் மக்கள் கூட்டம்
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், கடந்த செவ்வாய்கிழமை குமாரும் அவரது மகன்களும் கிராம மக்களிடம் வயலில் தாங்களாகவே தோன்றிய சில இந்துக் கடவுள்களின் சிலைகளைக் கண்டதாகக் கூறினர். கடவுளின் தோற்றம் பற்றிய செய்தி பரவியதால், கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் "தரிசனம்" செய்ய அவரது வயல்வெளியில் கூடினர்.இதையடுத்து தந்தையும் மகன்களும் அங்கு கோவில் கட்டுவதாக கூறி கிராம மக்களிடம் நன்கொடை கேட்க ஆரம்பித்தனர்.
உண்மையை உடைத்த அமெசான் முகவர்
இச்சம்பவத்தையடுத்து அமேசானின் உள்ளூர் டெலிவரி முகவர் ஒருவரால் இந்த மோசடி அனைவருக்கும் தெரிய வந்தது. இச்செய்தி பரவியதை அறிந்த டெலிவரி முகவர், குமாருக்கு பார்சலை டெலிவரி செய்ததாக காவல் துறைக்கு தெரிவித்தார். இயற்கையாகவே தோன்றியதாக கூறப்படும் இந்த சிறிய சிலை அமேசானில் இருந்து வெறும் 169 ரூபாய்க்கு வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்த, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததன் காரணமாக தந்தையும் மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது