அனைத்து உயிரினங்களுக்கும் தாய் மீதான பாசத்திற்கு ஈடு இணையானது எதுவுமே இல்லை. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் எனும் பழமொழிக்கு ஏற்ப தாய்க்கு ஒன்று என்றால் பிள்ளைகளுக்கு எங்கிருந்தாலும் நெஞ்சம் பொறுக்காது என்பது அதை உணர்ந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.
அதுபோன்று நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரி திபன்ஷூ கப்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்தரத்தில் தொங்கும் தாயை ஆபத்தில் இருந்து 3 அல்லது 4 வயது சிறுவன் காப்பாற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தாயை காப்பாற்றிய தனயன்:
அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஏணியின் உதவியுடன் 7 அடி உயரத்தில் மேலே நின்று கம்பி ஒன்றில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கீழே அவரது மகன் தனது தாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த சிறுவனுக்கு 3 அல்லது 4 வயது மட்டுமே இருக்கும்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த இளம்தாய் நின்று கொண்டிருந்த ஏணி கீழே விழுந்துவிட்டது. இதனால், அந்த பெண் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக அந்தரத்தில் தொங்கத் தொடங்கினார். அந்தரத்தில் தொங்கிய அந்த இளம்பெண் உதவி கோரி கூச்சலிட்டார். தனது தாய் கம்பியை பிடித்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம் பாலகன் சில நொடிகள் திகைத்து பார்த்தாலும் தனது தாய் ஆபத்தில் இருப்பதை உடனடியாக உணர்ந்தான்.
உடனே, ஓடிச்சென்று கீழே விழுந்த ஏணியை தூக்க முயற்சித்தான். அவனது வயதுக்கும், உடலுக்கும் இரு பக்கம் படிக்கட்டுகள் கொண்ட அந்த ஏணியை தூக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனாலும், தாய் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அந்த மகன் தனது தாயை காப்பாற்ற வேண்டும், தனது தாய் கீழே விழுந்து விடக்கூடாது என்பதை உணர்ந்து தன் முழு பலத்தையும் திரட்டி அந்த இரும்பு ஏணியை தூக்குவான்.
குவியும் பாராட்டுக்கள்:
மிகவும் சிரமப்பட்டாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஏணியை அந்த சிறுவன் தூக்கி நிறுத்திவிடுவான். அவன் நிறுத்தியதும் அந்த ஏணியை அந்த இளம் தாய் தனது கால்களால் கெட்டியாக பிடித்து அதை நிறுத்துவார். ஏணியில் தனது தாய் பாதுகாப்பாக நின்ற பிறகும், தனது தாய் விழுந்து விடக்கூடாது என்று அந்த சிறுவன் அந்த ஏணியை கெட்டியாக பிடித்துக் கொள்வான்.
இந்த வீடியோ பார்ப்பவர்கள் உள்ளங்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இந்த வீடியோவை இதுவரை 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் பாரத்துள்ளனர். இந்த வீடியோவிற்கு கீழே பலரும் அந்த சிறுவனை பாராட்டி வருகின்றனர். தனது தாய் மீது மகன் கொண்ட அன்பின் வெளிப்பாடிற்கு எல்லையே இல்லை என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். அசாத்தியத்தை சாத்தியமாக்குவது தாயின் அன்பு என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: Covid - 19: சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு
மேலும் படிக்க: வாத்து பண்ணையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை - புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு