கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான கட்டுப்பாடுகளோடு கடுமையான நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறித்திய நிலையில், மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் முகக் கவசத்தை சரியாக அணியாததால் குடியானவர் ஒருவர் காவல்துறையால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான கிருஷ்ணா கேயர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று, மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சந்திக்க செல்லும் வழியில் இவரின் முகக்கவசம் நழுவியுள்ளது. இதைக் கவனித்த இரண்டு காவலர்கள் அவரை சாலையில் வழிமறித்து விசாரித்துள்ளனர். பின்னர், காவல் நிலையத்திற்கு தங்களுடன் வருமாறும் நிர்பந்தித்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு உணவு அளிக்க வேண்டும் என்று காரணத்தினால் காவல் நிலையத்திற்கு வர அவர் மறுத்து விட்டார். இதனையடுத்து, காவல் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கத் தொடங்கினர்.
இந்த சம்பவம் சாலையில் நின்றுக் கொண்டிருந்தா சிலரால், வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. சமூக ஊடங்களில் இந்த வீடியோ தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. வீடியோவில், அந்த நபரின் மகன் தனது தந்தையை விட்டு விடுங்கள் என்று காவலர்களிடம் கதறுவது அனைவரையும் மனம் கலங்க வைக்கிறது. இந்த சம்பவம் அந்த குழந்தையின் மனதில் என்னவெல்லாம் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, காவலர்களை அந்த நபர் அடிக்க முயன்றதாகவும், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ மாற்றியமைக்கப் பட்டுள்ளதாகவும் இந்தூர் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் அஷுதோஷ் பாக்ரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக கமல் பிரஜாபத், தர்மேந்திர ஜாட் ஆகிய இரண்டு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட்டிருபப்தாகவும் ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பி. ஜெயராஜ் (59 வயது) மற்றும் அவரது மகன் ஜெ. பென்னிக்ஸ் (31 வயது) ஆகியோர் மத்திய அரசின் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணையில் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவலில் இருந்தபோது இவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். இது இவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது.
நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழகம், டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய எட்டு மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.