பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது அஜ்னாலா. இந்த நகரத்தில் இந்திய- பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த எல்லை வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரன் போதைப்பொருட்களுடன் இந்தியாவிற்குள் ஊடுருவ உள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அமிர்தசரஸ் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரன் எல்லையில் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்தனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவனை பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில், அவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். அவனிடம் இருந்து 22 கிலோ ஹெராயின், 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது.
இந்த போதைப் பொருட்களை குர்தஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் பூரா மற்றும் ஜஸ்பால் சிங் பெற திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஜெகதீஸ் பூராவிற்கும் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.