அமேசான் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, கவுதம் அதானி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக விளங்கி வரும் நிலையில், தொழிலதிபரும், அதானியின் மூத்த சகோதரருமான வினோத் சாந்திலால் அதானி, வெளிநாடு வாழ் இந்தியர்களில் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.


ஐஐஎஃப்எல் ஹுருன் இந்தியா 2022ஆம் ஆண்டுக்கான பணக்காரர் பட்டியலில் வினோத் சாந்திலால் அதானி 1.69 லட்சம் கோடி சொத்துக்களுடன் ஆறாவது பணக்கார இந்தியராக உள்ளார். இந்தாண்டு, 94 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். வினோத் சாந்திலால் அதானி பணக்கார என்.ஆர்.ஐ.ஆக உருவெடுத்த நிலையில், ஹிந்துஜா சகோதரர்கள் 1.65 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து 48 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


மொத்தம் 70,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் அமெரிக்காவில் வசிக்கும் பணக்கார என்ஆர்ஐ-ஆக ஜெய் சவுத்ரி திகழ்கிறார். வினோத் சாந்திலால் அதானி துபாயில் வசிக்கிறார். சிங்கப்பூர், துபாய் மற்றும் ஜகார்த்தாவில் வர்த்தகத்தை கவனித்து வருகிறார். 1976 ஆம் ஆண்டு மும்பையில் ஜவுளித் தொழிலைத் தொடங்கிய அவர், பின்னர் சிங்கப்பூரில் அதை விரிவுபடுத்தினார். 


கௌதம் அதானியின் மூத்த சகோதரர் 1994 இல் துபாய்க்கு குடிபெயர்ந்த பிறகு தனது தொழிலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு எடுத்துச் சென்றார். இவர், கடந்த ஆண்டில் தனது சொத்து மதிப்பில் 37,400 கோடி ரூபாயை சேர்த்துள்ளார். இது 28 சதவீதம் அதிகமாகும். அதாவது வினோத் சாந்திலால் அதானி கடந்த ஆண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 102 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 


இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்தை தற்போது பிடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வினோத் சாந்திலால் அதானியின் சொத்து மதிப்பு 850 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 15.4 மடங்கு உயர்ந்துள்ளது. 


வினோத் சாந்திலால் அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்து 9.5 மடங்கு அதிகரித்துள்ளது. 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சொத்துக்களுடன் கௌதம் அதானி முதன்முறையாக Hurun India Rich List 2022 இல் முதலிடம் பிடித்தார். பட்டியலின்படி, கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 1,600 கோடி ரூபாய் சேர்த்துள்ளார்.


புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 154.7 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க்  273.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறார். கடந்த மாதம், அதானி அர்னால்ட்டை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால், மஸ்க் மற்றும் பெசோஸ் ஆகியோரை அவரால் பின்னுக்கு தள்ள முடியவில்லை.


153.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட பெர்னார்ட் அர்னால்ட், மூன்றாவது இடத்தில் உள்ளார். இருப்பினும், அவரது மொத்த சொத்து மதிப்பு இன்று 4.9 பில்லியன் டாலர்கள் அல்லது 3.08 விழுக்காடு சரிவை கண்டுள்ளது. அதே சமயம், பெசோஸ் 149.7 பில்லியன் டாலர்கள் செல்வத்துடன் 2.3 பில்லியன் டாலர்கள் குறைந்து நான்காவது இடத்தில் உள்ளார்.