மஹிந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர்.  அவ்வப்போது தனித்திறமைகளை, மனிதாபிமான செயல்களை, பாலின சமத்துவத்தை என பல்வேறு விஷயங்களையும் சுட்டிக் காட்டி ட்வீட் செய்வார்.


ஆனந்த் மஹிந்திரா:


ஒரு ரூபாய்க்கு இட்லி விற்ற தமிழகத்தின் கமலாத்தாள் பாட்டிக்கு அவர் வீடு கட்டிக் கொடுத்தது நினைவிருக்கலாம். கேரளாவில் 2018ல் பெய்த பெருமழை வெள்ளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் பெண் ஒருவர் படகில் இருந்து இறங்க தன் தோளை கொடுத்த சம்பவத்தப் பாராட்டி அவருக்கு மாராஸோ கார் பரிசாக வழங்கியிருந்தார்.


அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரின் ஜீப் வடிவமைப்பை கண்டு வியந்து அவருக்கு மஹிந்திரா நிறுவனத்தில் வேலை தந்தார். இப்படியாக பல்வேறு தருணங்களில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கும் ஆனந்த் மஹிந்திரா அண்மையில் ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.


திருமண நாளில் கார்:


அதில் தனது நிறுவனத் தயாரிப்பை வாங்கிய குடும்பம் ஒன்று புது கார் முன்னால் நின்று குதூகலமாக ஆடிக் கொண்டாடுகின்றனர்.






காரை வாங்கிய நபருக்கு அது 23வது திருமண நாள். தனது திருமண நாளிலேயே கார் கிடைத்துவிட்டதால் மனைவி, மகன்கள், உறவினர்களோடு ஒரே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மே 16 அன்று தினநாத் சாஹு குடும்பத்தினருக்கு அவர்கள் புக் செய்திருந்த மஹிந்திரா எஸ்யுவி வாகனம் கிடைத்துள்ளது. தனது 23வது திருமண நாளில் வாகனம் கைக்கு கிடைத்தால் அவர் குடும்பத்துடன் ஆடி மகிழ்கிறார்.


அந்த வீடியோவை மனிஷ் ராஜ் சிங்கானியா, ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


மக்களின் மகிழ்ச்சி:


இதனைப் பார்த்த ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டரில் அதைப் பகிர்ந்து மக்களின் மகிழ்ச்சி தான் ஆட்டோமொபைல் தொழிலில் இருக்கும் என்னைப் போன்றோருக்கான வெகுமானம் என்று கூறியுள்ளார்.
அவர் பகிர்ந்த வீடியோவின் கீழ் ட்விட்டராட்டிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு நெட்டிசன், "இது வெறும் வாகனம் இல்லை. இது பிரகாசமான எதிர்காலத்திற்கன முன்னோக்கிய பயணம். இந்தக் காட்சி இந்திய ஆட்டோமொபைல் துறையின் கட்டுப்படுத்த முடியாத உத்வேகம்" என்று பதிவிட்டுள்ளார்.


இன்னொரு நபர் , நம் வாழ்வில் சில விஷயங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொண்டுவரும். அதில் காரும் ஒன்று. நமக்கே நமக்கான கார் மட்டற்ற மகிழ்ச்சி தரும் என்று கூறியுள்ளார்.


இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.