ஜம்முவில் ஒரு ஆண் கலைஞர் ஒருவர் மேடையில் நடனமாடி கொண்டிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் யோகேஷ் குப்தா என்றம் அந்த நபர் மாரடைப்பால் இறந்ததாகவும் கூறப்படுகிறது.


ஜம்முவில் உள்ள பிஷ்னா பகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தியின்போது பார்வதி தேவியின் வேடமிட்டு யோகேஷ் குப்தா நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியுள்ளார். அப்பொழுது, நடனமாடி கொண்டிருந்த அந்த கலைஞர்   திடீரென கீழே விழுந்து மரணமடைந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 










அதன் பின்னர், சிவபெருமான் வேடமிட்ட மற்றொரு கலைஞர் மேடைக்கு வந்து அவரை எழுப்ப முயற்சி செய்கிறார். ஆனால், அந்த  கலைஞர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. பார்வையாளர்கள் பலர் இது நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்து அமைதியாக இருந்தனர். 


அதன்பிறகு, நிலைமையை புரிந்துகொண்ட சிலர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக, நாடு முழுவதும் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


ஜூன் மாதம், கேகே என்று அன்புடன் அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் தனது இசை நிகழ்ச்சிக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இறந்தார். அதேபோல், கேகே இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, மே 28 அன்று கேரளாவின் ஆலப்புழாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் சரிந்து விழுந்து மூத்த மலையாள பாடகர் எடவா பஷீரும் இறந்தார்.