இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்புகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இறுதி விடைக்குறிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் உள்ளிட்டவற்றுக்காக நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினர்.
இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக முதல்முறையாக நடத்தப்பட்டது. குறிப்பாக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது.
நள்ளிரவில் வெளியான தேர்வு முடிவுகள்
நீட் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 720-க்கு 715 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த மாணவர் வத்ஸா ஆஷிஸ் பத்ரா 2ஆவது இடத்தைப் பிடித்தார். இவரும் அதே மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஹ்ரிஷிகேஷ் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவரும் 720-க்கு 715 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார்.
நீட் தேர்வில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 160 மாணவர்களும், 5 லட்சத்து 63 ஆயிரத்து 902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 30ஆவது இடத்தை த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் 720-க்கு 705 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார். அடுத்ததாக 43 இடத்தை ஹரிணி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் 702 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்புகளையும் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதை மாணவர்கள் தங்களுடைய விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மதிப்பெண்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2022/09/2022090743.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, இறுதி விடைக்குறிப்பை அறிந்துகொள்ளலாம்.