இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகள் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிகளாக கொண்டுவரப்படுமா என்ற விவாதம் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எஃப்) தலைமை தாங்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
ஐ.எம்.எஃப் தலைமை தாங்க வேண்டுகோள்
புதன்கிழமை செப்டம்பர் 7ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவும் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது உலக பொருளாதார தொடர்பான போக்கு குறித்து பேசினர்
இந்த சந்திப்பின் போது பேசிய நிர்மலா சீதாராமன், கிரிப்டோ கரன்சிகளை, உலக முழுவதுக்கும் ஒரே மாதிரியான விதிகளைக்கொண்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அவசியத்தையும். அந்த நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தலைமை தாங்க வேண்டும் என்று கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவிடம் தெரிவித்தார்.
அதையடுத்து, இதர பிரச்சனைகளுடன், உலகளாவிய பொருளாதாரத்தில் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை போக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்தியா சிறப்பாகவுள்ளது:
கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதாரத்தில் பின்னடைவுகள் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜார்ஜிவா கூறினார். மேலும் சுற்றுச்சூழல், கிரிப்டோ கரன்சிகள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகளில் இந்தியாவுடன் பணியாற்ற தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கு முன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஜார்ஜிவா சந்தித்தார். அப்போது இருவரும் உலக பொருளாதாரம் குறித்தும், புவியியல் அரசியல் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் ஜார்ஜிவாவிடம் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.