தலைக்கேறிய போதை:


உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் போதையில் கண்டெய்னர் டிரக்கை ஓட்டிய ஓட்டுநர் ஒரு கார் மீது மோதி அதை 3 கி.மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றார். அதிர்ஷ்டவசமாக அந்தக் காரில் இருந்தவர்கள் கதவைத் திறந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தை சாலையில் இருந்தோர் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.


ஒரு சிலர் சுதாரித்துக் கொண்டு போலீஸுக்கு தகவல் கொடுக்க போலீஸார் அந்த டிரக்கை துரத்தி வழிமறித்து நிறுத்தி ஓட்டுநரை கைது செய்தனர். அப்போதுதான் அந்த ஓட்டுநர் நிலை கொள்ளாத போதையில் இருந்ததே தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.






டெல்லி சம்பவத்தை நினைவூட்டும் மீரட் சம்பவம்


டெல்லியில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி அதிகாலையில் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் சென்ற ஸ்கூட்டி மீது பலீனோ கார் ஒன்று மோதியது. காரின் அடியில் சிக்கிக் கொண்ட இளம் பெண் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டத்தில் கொடூரமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.


விபத்தில் சிக்கிய இளம் பெண் தனியாக செல்லவில்லை. அவர் பின்னால் இன்னொரு பெண் இருந்தார் என்பது கண்டறியப்பட்டது. அந்தப் பெண் அளித்தப் பேட்டியில் அஞ்சலி சிங் போதையில் இருந்தார் என்று கூறியது இன்னொரு திருப்பமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் காருக்கு கீழ் யாரோ சிக்கிவிட்டனர் என்று தெரிந்தே தான் காரை ஓட்டியவர்கள் அதனை தொடர்ந்து இயக்கினர் என்றும் அஞ்சலியின் தோழி நிதி கூறினார்.


கோர விபத்து:


இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் தாயார் என் மகளின் உடலில் தோல் இல்லை. ஆடை இல்லை. 7 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடித்து என் மகள் இறந்தார். அவருக்கு நீதி வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.


டெல்லி இளம் பெண் சம்பவத்திற்குப் பின்னர் அதேபோல் காரில் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துகள் நடந்த சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சத்துக்கு வந்தன. பெரும்பாலும் இது போன்ற சம்பவங்கள் ஒன்று பாதிக்கப்பட்டவர் அலட்சியத்தால் நடக்கும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மற்றிரு வாகனத்தால் நடைபெறும்.