நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது.  பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


அந்த வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாதி நிறைவு பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்றம் மார்ச் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிர்கட்சியினர் தொடர் முழக்கம் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.


அமளிக்கு மத்தியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர்:


குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.


அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளித்தார். அதன் பிறகு, கேள்வி நேரம் நடைபெற்றது.


பொருளாதார தெளிவு:


கேள்வி நேரத்தில் மானிய கோரிக்கைகளுக்கு அந்தந்த துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர் அமளிக்கு மத்தியில் பட்ஜெட் குறித்து பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "2023-24 பட்ஜெட்டின் சாராம்சத்தை நான் சில வார்த்தைகளில் கூறினால், இந்திய வளர்ச்சிக்கான தேவைகளை நிதி விவேகம் வரம்பிற்குள் சமநிலைப்படுத்துகிறது. 


இந்தியா தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதையும், மீண்டு வருவதற்கான பாதை இருப்பதையும், நம்மால் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் பல பார்வையாளர்களாலும் நாம் தெளிவாகக் கவனிக்க முடியும் என்ற பின்னணியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.


பிப்ரவரி 22 முதல் ரஷ்ய-உக்ரைன் போரும் நடந்து வருகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகளில் எங்களிடம்  இதன் விளைவாக தனித்துவமான பணவீக்க அழுத்தங்கள் இருந்தன. மேலும், சீனாவில் கோவிட் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது நாம் எதிர்பார்க்காத ஒரு பரிமாணத்தைச் சேர்த்தது. 


இதனால் சர்வதேச பொருட்களின் விலைகள் அதிகரிக்க வழிவகுத்தது. மேலும் தீவிர வானிலையின் மாறுபாடுகள் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் உணவுப் பணவீக்கத்தைத் தூண்டின. சவால்கள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. 23-2024 நிதியாடண்டிலும் இது தொடரும்" என்றார்.


விவசாயிகளை காத்த அரசாங்கம்:


உணவு மானியம் குறித்து பேசிய அவர், "உணவு மானியம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.1.97 லட்சம் கோடியாக உள்ளது. உர மானியம் நடப்பு நிதியாண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்தை அதிகரிப்பதன் மூலம் உலகச் சந்தையில் உரங்களின் விலை உயர்விலிருந்து விவசாயிகளை அரசாங்கம் காத்துள்ளது" என்றார்.