உலகின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். இதை பேசும் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் குடியேறி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  தமிழர்கள் செல்லும் இடமெல்லாம் தங்களின் கலாசாரத்தை உயர்த்தி பிடித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழர் திருநாளான பொங்கல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் கொண்டாடியது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சி.என். லூங் ஏஎம்கே ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார்.


அதில், கெபுன் பாரூ மற்றும் ஒய்சிகே பகுதிகளில் வசிப்பவர்களுடன் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து பதிவிட்டிருந்தார்.


 






இந்த குறிப்பிட்ட ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பிரபலம் என கூறியுள்ளார்.


சிங்கப்பூர் பிரதமரின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த மோடி, "இதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. வலிமையான தமிழ் கலாசாரம் உலகளவில் பிரபலமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


சாதி, மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை. 10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவே வீடுகளில் வண்ண கோலமிட்டு மக்கள் பொங்கலை வரவேற்பர். தொடர்ந்து அதிகாலையிலேயே எழுந்து நீராடி  புத்தாடை அணிந்து விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மண்பானைகளில் பொங்கலிட்டு படைத்து மகிழ்வர்.


அதேபோல, மக்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குழை, பனங்கிழங்கு, கரும்பு வைத்து பொங்கல் பொங்கி வந்தததும் “பொங்கலோ பொங்கல்” என உற்சாக குரலிட்டு மக்கள் பொங்கலை கொண்டாடுவர்.


சிங்கப்பூர், மலேசியாவை போன்று கனடாவில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருவதால் அங்கும் பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதற்கு, கனட பிரதமர் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதேபோல, இந்தாண்டும் கனடா பிரதமர் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்திருந்தார்.






அவர் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், "கனடா உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் சமூகத்தினர் தைப் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். நான்கு நாள்கள் நடைபெறும் இந்த பண்டிகையில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கின்றனர். 


அனைவருக்கும் அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம் வேண்டி எங்களது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.