சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்காக இருவர் சாலைகளில் அரை நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு கண்டனங்களைப் பெற்று வருகிறது.


வீடியோவில் அரை நிர்வாணப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்கள் நடத்தவைக்கப்படுவதும், இவர்களை சாட்டையால் தாக்கியபடி ஒரு நபர் பின் தொடர்வதும், இந்தச் சம்பவத்தை தங்கள் செல்போன்களில் பதிவு செய்தபடி கும்பல் ஒன்று பின் தொடர்வதும் பதிவாகி உள்ளது.


 






இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 33.5 கிலோ மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மூட்டையுடன் பயணித்த நரசிங் தாஸ் (50) மற்றும் ராம்நிவாஸ் மெஹர் (52) எனும் இரண்டு நபர்களிடமிருந்து  சாக்குப்பையுடன் 33.5 கிலோ மாட்டிறைச்சி முன்னதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இறைச்சி கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டதாகவும், இந்தப் பரிசோதனை அறிக்கை குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட நபர்களைத் தாக்கிய நபர்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.


முன்னதாக மாட்டிறைச்சி தனக்குப் பிடித்த உணவு எனக் கூறியதற்காக பிரம்மாஸ்திரா பட ப்ரோமோஷன் பணிகளின் போது நடிகர் ரன்பீர் கபூரை கோயிலுக்குள் நுழைய விடாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடந்த 2011ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் தனது ராக்ஸ்டார் படத்தை விளம்பரப்படுத்தும் போது ​​மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புவதாகக் கூறினார். மேலும் தான் ஒரு பெரிய மாட்டிறைச்சி ரசிகன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 


 






தொடர்ந்து பிரம்மாஸ்திரா பட வெளியீட்டின்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி கோயிலில் ரன்பீர் கபூர், ஆலியா பட் சென்று வழிபட்ட நிலையில், அங்கு வந்த பஜ்ரங் தள் தொண்டர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டனர்.