கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலை 6.42 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. 


முன்னதாக இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 






இந்த நிலையில் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குஜராத் முழுவதும் இன்று (நவ.02) துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி, குஜராத் மாநிலத்தில் இன்று தேசியக்கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் விழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.


முன்னதாக இந்த மோர்பி பாலத்தை கடந்த 150 ஆண்டுகளாக பராமரிக்கும் பொறுப்பில் இருந்து வந்த ஓரேவா நிறுவனத்தின் தற்போதைய மேலாளர் தீபக் பரேக் ‘பாலம் இடிந்து விழுந்தது கடவுளின் விருப்பம்’ என சர்ச்சைக் கருத்தை தெரிவித்திருந்தார். 


”இது போன்ற துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வு நடைபெற்றது கடவுளின் விருப்பம் (Bhagwan ki ichcha)" என்று அவர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் எம்.ஜே. கான் முன் தெரிவித்துள்ளார்.


மோர்பி துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.சாலா இது குறித்து பேசுகையில், பாலத்தின் கேபிள் துருப்பிடித்துவிட்டது என்றும், பாலத்தை புதுப்பித்த நிறுவனம் இந்தக் கேபிளை மாற்றவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


"பாலம் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியாக, பிளாட்பாரம் மட்டும் மாற்றப்பட்டது. பாலத்தின் கேபிளில்  எண்ணெய் தடவப்பட்டோ, கிரீஸ் தடவப்பட்டோ பராமரிக்கப்படவில்லை. கேபிள் உடைந்த இடத்தில் இருந்து கேபிள் துருப்பிடித்துள்ளது. கேபிளை சரி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.சாலா தெரிவித்துள்ளார்.