உத்தரப் பிரதேசத்தின் எட்டாவாவில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில்வே கிராசிங்கில் ஒரு பயணியின் பைக் தண்டவாளத்தில் சிக்கி இருப்பதை வீடியோவில் காணலாம். அவ்வழியாக வந்த ரயில் பைக் மீது ஏறி அந்த பைக் துண்டு துண்டாக சிதறுவதையும் வீடியோவில் பார்க்கலாம்.
வீடியோவில், ஒரு நபர் தனது பைக்குடன் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதைக் காணலாம். ஆனால், தண்டவாளத்தில் அது சிக்கிக் கொள்கிறது. அந்த நபர், சிக்கிய பைக்கை தண்டவாளத்தில் இருந்து எடுக்க முயற்சி மேற்கொள்கிறார். ஆனால், அவர் அதை எடுக்கு முடியாமல் தவிக்கிறார். இறுதியில், வேகமாக வந்த ரயில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிக்கிறார்.
முன்னதாக, ரயில் வருவதைக் கண்ட அந்த நபர், வாகனத்தை தண்டவாளத்தில் விட்டுவிட்டு ஓடுகிறார். அந்த வழியாக செல்லும் ரயிலில் மோதி மோட்டார் சைக்கிளின் பாகங்கள் உடைந்து கிடப்பதை வீடியோவில் காணலாம். கடவுப்பாதை மூடப்பட்டு ரயில் கடந்து செல்லவிருந்த நிலையிலும் அந்த நபர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஆகஸ்ட் 26ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 2021 அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2020ல் 3,68,828 ஆக இருந்த சாலை விபத்துகள் 2021ல் 4,22,659 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ல் மொத்தம் நடந்த 4,22,659 விபத்துகளில் 4,03,116 விபத்துகள் சாலையிலும், 17,933 ரயில் விபத்துகளாகவும், 1,550 விபத்துகள் ரயில் தண்டவாளம் கடக்கும் போதும் நடந்துள்ளன. இவற்றில் முறையே சாலையில் 1,55,622 உயிரிழப்புகளும், ரயில் விபத்துகள் 16,431 ஆகவும், தண்டவாள விபத்துகள் 1807 ஆகவும் உள்ளன.