பொதுவாக நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை நாம் வளர்க்கிறோம் இத்தகைய செல்ல பிராணிகளுக்காக சில பணக்காரர்கள் தினம் தோறும் ஏறக்குறைய ஐந்தாயிரம் வரை செலவு செய்கிறார்கள்.இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் வீட்டில் வைத்து வளர்க்கும் இந்த நாய்களுக்கு உணவு பராமரிப்பு, பயிற்சியாளர் என அதிகம் செலவிடுவார்கள். ஆனால் குஜராத் மாநிலத்தில் உள்ள குஷ்கல் என்ற ஊரில் தெருநாய்களுக்கு சொந்தமாக ரூபாய் 5 கோடி மதிப்பில் நிலங்கள் உள்ளன என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
பொதுவாக நாய்களை வேட்டைக்கும் வீட்டின் பாதுகாப்புக்கும் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் வளர்ப்பு நாய்களுக்கு செலவு செய்தால் ஒரு அர்த்தம் இருக்கும்.ஆனால் இங்கு தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு 5 கோடிக்கு சொத்து என்றால் சற்றே ஆச்சரியம் தான்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பலன்பூர் தாலுகாவில் உள்ள குஷ்கல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெருநாய்கள் நன்றாக,அவற்றின் வாழ்க்கையை வாழ உதவும் பொருட்டு,ஒரு நிலத்திலிருந்து வரும் முழு வருவாயையையும் தெரு நாய்களுக்கு என செலவு செய்கிறார்கள்.இந்த நடை முறையானது நமக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.இந்த கிராமத்தின் முன்னோர்கள் கிராமத்தின் தெரு நாய்களுக்கு ஒரு தனித்துவமான அமைப்பை அமைத்துள்ளனர். குறிப்பாக தெரு நாய்களுக்கு 20 ஏக்கர் விவசாய நிலத்தை ஒதுக்கினார்கள். இப்போது இந்த இடத்தின் மதிப்பு 5கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலத்தின் பட்டா நாய்களின் பெயரில் இல்லை என்றாலும், நிலத்திலிருந்து வரும் வருமானம் அனைத்தும் நாய்களுக்காக ஒதுக்கப்படுகிறது.இதனால் இந்த ஊர்களில் தெரு நாய்களும் ,பணக்கார நாய்களாக உள்ளது.
இந்த பகுதியில் இருந்து ஒரு நாய் கூட பசியோடு இல்லாமல் இருப்பதை கிராம மக்கள் உறுதி செய்கிறார்கள். இதுமட்டுமின்றி இந்த பகுதியில் 150 நாய்களுக்கும் மேல் உள்ளது என்று கூறுகின்றனர். இந்த கிராமத்தில் சௌதாரி சமூகத்தை சேர்ந்த சுமார் 700மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சுதந்திரத்திற்கு முன்பு, பலன்பூர் ஆனது நவாப் ஆட்சியின் கீழ் இருந்தது.அப்போது ஆட்சியாளர் கிராம மக்களுக்கு சில நிலங்களை வழங்கினார்கள்.மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்கு தேவையான உணவு மற்றும் வாழ்வாதாரத்தை தாங்களே உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது.தெரு நாய்களுக்கு என்ன செய்வது என்று கிராம மக்கள் யோசித்தனர். இதனால் 20 ஏக்கர் விவசாய நிலத்தை நாய்களுக்காக ஒதுக்கினார்கள். அதன்பிறகு இந்த நிலத்தில் இருந்து வரும் மொத்த வருமானமானது , இந்த ஊரில் உள்ள தெருநாய்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது. ஜாதி ,மத வேறுபாடின்றி அனைத்து கிராம மக்களும் இன்று வரை இந்த சிறந்த சேவையை செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால்? இங்கு தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்காக கிராம மக்கள் ஒரு சிறப்பான உயரமான இடத்தைக் கட்டியுள்ளனர். கிராமத்தில் உள்ள விலங்குகளுக்கு உணவு தயாரித்து பரிமாற சிறப்பு பாத்திரங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஊரில் எல்லா தெருநாய்களுக்கும் போதுமான ஆரோக்கியமான உணவு கிடைப்பதை கிராமவாசிகள் ஒவ்வொருவரும் தினமும் உறுதி செய்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் இந்த உலகை விலங்குகளுக்கு நட்பாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் .இந்த கிராமத்தில் உள்ளது போல் அனைத்து கிராமத்திலும் இந்த முறையாது பின்பற்றபட்டால் பல உயிர்களை காக்க முடியும்.