டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருவரையொருவர் ஊழல் குற்றச்சாட்டைக் கூறி டெல்லி சட்டப்பேரவையில் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க: போன் பேசல.. சிறுமியை உயிரோடு எரித்த நபர்! கைது செய்தபோது பெருமையாக சிரிப்பு! தொடரும் விசாரணை!
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவராக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா 2016இல் இருந்தபோது ரூ. 1400 கோடி ஊழல் நடந்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
துணை நிலை ஆளுநருக்கு எதிராக பாடல்கள் பாடியும், முழக்கங்களை எழுப்பியும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர். பகத் சிங், சிவராம் ராஜகுரு மற்றும் சுகதேவ் சிலைகள் அருகே பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா நடத்தினர்.
டெல்லியில் அவரது அரசை கவிழ்க்க "ஆபரேஷன் கமலா"வின் ஒரு பகுதியாக பாஜக தனது கட்சியை உடைக்க முயற்சித்த போதிலும், அனைத்து எம்எல்ஏக்களும் தன்னுடன் இருப்பதை நிரூபிக்க அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, போராட்டங்கள் வெடித்தன. தனது கட்சி எம்எல்ஏக்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த விரும்புவதாகவும், கட்சியின் உத்தரவை மீற ஆசைப்பட மாட்டார்கள் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகளை கவிழ்க்க பாஜக 277 எம்எல்ஏக்களை வாங்கியுள்ளது என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். "எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது.
ஆனால், ஒரு எம்எல்ஏ கூட அவர்களின் வாய்ப்பை ஏற்கவில்லை. டெல்லியில் 'ஆபரேஷன் கமலா' தோல்வியடைந்தது" என்றும் அவர் கூறினார். மக்களிடம் வரி விதித்து எம்எல்ஏக்களை வாங்குவதாகவும் தற்போதைய மத்திய அரசு ஊழல் மிகுந்த அரசு என்றும் கூறியுள்ளார்.
முந்தைய நாள் சட்டப்பேரவை நடவடிக்கைகளின் போது, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மேலும், டெல்லி பள்ளிகளின் கட்டுமானம் தொடர்பான மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) அறிக்கை, கலால் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க: பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம்.. முதலிடத்தில் டெல்லி! அடுத்தடுத்த நகரங்கள் இவைதான்!!
இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிசோடியா வீட்டில் சிபிஐ சமீபத்தில் சோதனை நடத்தியது. மதுபானக் கொள்கை மீறல் தொடர்பாக சிபிஐயின் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில் சிசோடியா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.